Last Updated : 07 Jul, 2018 08:03 AM

 

Published : 07 Jul 2018 08:03 AM
Last Updated : 07 Jul 2018 08:03 AM

மணல் முறைகேடுகளை தடுக்க சென்னையில் ரூ.1 கோடியில் அதிநவீன கட்டுப்பாட்டு அறை

தமிழ்நாட்டில் மணல் கடத்தல் மற்றும் முறைகேட்டை முற்றிலுமாகத் தடுக்க கல்சா மகாலில் ரூ.1 கோடி செலவில் அதிநவீன கட்டுப்பாட்டு அறை விரைவில் திறக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளுக்காக தினமும் சராசரியாக 35 ஆயிரம் லாரி லோடு மணல் தேவைப்படுகிறது. ஒரு லாரி லோடு என்பது 200 கன அடியாகும். அரசியல் கட்சியினர், உள்ளூர் மக்கள், லாரி உரிமையாளர்கள், அதிகாரிகள் என பலரும் முறைகேட்டில் ஈடுபடுவதால் ஒரு லாரி லோடு மணல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பைக் காரணம் காட்டி தொடரப்பட்ட வழக்குகளில் மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் அரசு சட்டப் போராட்டம் நடத்தி இடைக்கால அனுமதி பெற்று, மணல் அள்ளி விற்கிறது. நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் அடிப்படையில் மணல் குவாரி நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் மணல் விற்பனையும் அதிகரித்துள்ளது. இருப்பினும், மணல் விற்பனையில் முறைகேடு நீடிப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தற்போது தமிழ்நாட்டில் இயங்கும் 15 மணல் குவாரிகளில் இருந்து தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் லாரி லோடுகள் கிடைக்கின்றன. . குவாரியில் இருந்து மணல் சேமிக்கும் கிடங்குக்கு (யார்டு) இடைப்பட்ட தூரத்தில்தான் முறைகேடுகள் அதிகம் நடப்பதால், இவற்றுக்கு இடையே பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஜிபிஎஸ் வசதியுடன்கூடிய 25 லாரிகள் மட்டுமே மணல் எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு குவாரியிலும் குறைந்தபட்சம் 4 கண்காணிப்பு கேமராக்கள், குறிப்பாக குவாரி பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கண்காணிக்கும் அதிநவீன சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் மணல் குவாரிகள், கிடங்குகள், லாரிப் போக்குவரத்து உள்ளிட்டவை அந்தந்த மாவட்டத் தலைநகர் மட்டுமில்லாமல் சென்னையில் உள்ள பொதுப்பணித் துறை தலைமை அலுவலகத்தில் இருந்தபடியே 24 மணி நேரமும் துல்லியமாகக் கண்காணிக்கப்படுகிறது.

மணல் அள்ளுதல் மற்றும் விற்பனையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க செல்போன் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் கடலூரில், மணல் சேமிப்பு கிடங்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்பந்ததாரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஒரு மணல் குவாரி திறக்க 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகும். வரும் நாட்களில் 20 முதல் 30 குவாரிகள் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை முற்றிலுமாகக் கண்காணிக்க சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கல்சா மஹாலில் ரூ.1 கோடியில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன்கூடிய அதிநவீன கட்டுப்பாட்டு அறை திறக்கப்படுகிறது. அறையின் நாலாபக்கமும் மெகா டிவி.க்கள் பொருத்தப்பட்டு மணல் விற்பனை 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x