Last Updated : 29 Jul, 2018 08:38 AM

 

Published : 29 Jul 2018 08:38 AM
Last Updated : 29 Jul 2018 08:38 AM

கோரிக்கைகள் முழுவதுமாக ஏற்கப்படாமல் போராட்டம் வாபஸ்; தமிழக லாரி உரிமையாளர்கள் அதிருப்தி-புதிய சங்கம் உருவாக்க நடவடிக்கை

கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் லாரி வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது ஏமாற்றமளிப்பதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணமாக ரூ.18,000 கோடியை பெற்றுக்கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை 3 மாதத்துக்கு ஒருமுறை நிர்ண யிப்பதுடன், ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். லாரி உள்ளிட்ட மோட்டார் வாகனங் களுக்கான 3-ம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ் போர்ட் காங்கிரஸ் கடந்த 20-ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தது.

இந்த போராட்டத்துக்கு நாமக் கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய எல்பிஜி காஸ் டேங்கர் லாரி உரிமை யாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.

போராட்டம் தீவிரமடைந்ததால் தமிழகத்தில் மட்டும் 4.5 லட்சம் லாரிகள் நிறுத்தப்பட்டதாக, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்தது. இதனால், சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். லாரி உரிமை யாளர்களுக்கு நாள்தோறும் ரூ.200 கோடி வீதம் வருவாய் இழப்பும், ஒட்டுமொத்தமாக ரூ.5 ஆயிரம் கோடி இழப்பும் ஏற்பட்டதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

போராட்டம் வாபஸால் அதிருப்தி

இதனிடையே, போராட்டத்தின் 8-வது நாளான நேற்று முன்தினம் (27-ம் தேதி) இரவு லாரி வேலைநிறுத்தப் போராட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை செயலர் மாலிக்குடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் சரக்கு லாரி  போக்குவரத்து தொடங்கியது.

கோரிக்கைகளின் நிலை என்ன என்பது குறித்த அறிவிப்பு இல்லாமல் போராட்டம் வாபஸ் பெறப் பட்டதாக அறிவிக்கப்பட்டது லாரி உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

லாரி உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனரா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்ட மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி, "அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது. அதன் கீழ்தான் நாங்கள் வருகி

றோம். அதேவேளையில் அரசை நம்பித்தான் உள்ளோம். அதனால், சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக  6 மாதத்தில் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றி னால் மகிழ்ச்சியாக இருக்கும்" என்றார்.

ஏமாற்றம் அளிக்கிறது

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:

கோரிக்கைகள் குறித்து டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக் குள் கொண்டு வருவது கடினம் என்று தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஒரே சீரான  சுங்கவரி வசூலிப்பது, ஒரு முறை  மட்டும் முழு சுங்கக்கட்டணம் செலுத்துவது, கால தாமதமில்லாமல் சுங்கச்சாவடியை கடந்து செல்வது உள்

ளிட்ட கோரிக்கை சம்பந்தமாக குழு அமைத்து, 6 மாதங்களுக்குள் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவாகியுள்ளது.

மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் குறைப்பு சம்பந்தமாக ஹைதராபாத்தில் உள்ள ஐஆர்டிஏ இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையத்துக்கு மத்திய அரசு சிபாரிசு செய்துள்ளது. இந்த ஆணையத்தின் நிர்வாகிகளுடன் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, காப்பீட்டு கட்டணம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வெளிமாநிலங் களுக்கு 2 ஓட்டுநர்களுடன் செல்ல வேண்டும் என்ற உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. ஓட்டுநர், கிளீனர்களுக்கு பாரத பிரதமர் காப்பீட்டு திட்டத்துக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளில் வெறும் 50 சதவீதம் மட்டுமே அமல்படுத்த மத்திய அரசு இசைந்துள்ளது. சுங்கச்சாவடியை அகற்றுவது,  ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கையை மத்திய அரசு ஏற்காமல் இருப்பது ஏமாற் றத்தையே அளிக்கிறது என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல. ராசாமணி கூறியதாவது: லாரி உரிமை யாளர்களின் கோரிக்கைகள் எதையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிய வில்லை.

8 நாட்களாக வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டு அரசுக்கு சுமார் ரூ.30,000 கோடி வருவாய் இழப்பை யும், லாரி உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.500 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்குமா அல்லது வேலைநிறுத்த போராட்டத் துக்கு அழைப்பு விடுத்த சங்கங்கள் பொறுப்பேற்குமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இனியும் இந்த சங்கங்கள் தலைமையில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட் டத்தில் ஈடுபடமாட்டார்கள்.

இதனால் லாரி உரிமையாளர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முதல்கட்டமாக தமிழகத்தில் லாரி உரிமையாளர்களின் நலனுக்கென்று ஒரு புதிய அமைப்பை உருவாக்க, அனைத்து மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x