Published : 02 Aug 2014 12:00 AM
Last Updated : 02 Aug 2014 12:00 AM

சிக்னல் பிரச்சினையை சரிசெய்த போக்குவரத்து போலீஸார்: தி இந்து உங்கள் குரல் சேவையால் நடவடிக்கை

சிக்னலில் போலீஸார் இல்லாததால் தொடர் விபத்துகள் ஏற்படுவதாக 'தி இந்து' வாசகர் கூறியதை போலீஸாரின் கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

'தி இந்து'வின் வாசகர் குரல் பகுதிக்கு தொடர்பு கொண்ட சூளைமேட்டை சேர்ந்த நான்ஸி என்ற பெண், "சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலை மேத்தா நகரில் உள்ள சிக்னலில் போக்குவரத்து போலீஸார் எப்போதும் இருப்பதில்லை. சிக்னலும் சரியாக செயல்படுவதில்லை.

வாகன நெரிசல் மிகுந்த இந்த சிக்னல் அருகிலேயே ஒரு பள்ளிக்கூடமும் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் சாலையை கடப்பதற்கு சிரமப்படுகின்றனர். நான் அந்த சிக்னலில் ஸ்கூட்டரில் சென்றபோது ஒரு வேன் இடித்து கீழே விழுந்து விட்டேன். அப்போதுகூட போலீஸார் வரவில்லை. நான் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளி மாநிலத்துக்கு செல்ல இருக்கிறேன். இருப்பினும் அந்த சிக்னலில் நான் படும் சிரமங்களை மற்றவர்களும் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக இதை கூறுகிறேன்" என்றார்.

நான்ஸியின் நியாயமான கோரிக்கையை போக்குவரத்து போலீஸாரின் கவனத்துக்கு 'தி இந்து' கொண்டு சென்றது. வெள்ளிக்கிழமை காலையில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 3 போக்குவரத்து போலீஸார் மேத்தா நகர் சிக்னலில் போக்குவரத்தை சரிசெய்து கொண்டிருந்தனர். இதை நான்ஸி பார்த்து மீண்டும் 'தி இந்து'வுக்கு தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். போலீஸாரின் உடனடி நடவடிக்கைக்கு அப்பகுதி மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x