Published : 16 Jul 2018 08:13 PM
Last Updated : 16 Jul 2018 08:13 PM

தூக்கு தண்டனைக் கைதிகளை தூக்கிலிடும் வேலைக்கு ஆள் தேடும் இலங்கை அரசு: தானாக முன்வந்த 71 வயது மூதாட்டி

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வியாபாரிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக தூக்கிலிடுபவர் வேலைக்கு இலங்கை அரசு நேர்முகத் தேர்வினை நடத்த உள்ள நிலையில், தூக்கு தண்டனைக் கைதிகளை தூக்கிலிடும் வேலைக்கு 71 வயது மூதாட்டி ஒருவர் தானாக முன்வந்துள்ளனார்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் இலங்கை காலணி நாடாக இருந்த போது இலங்கை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 285-வது பிரிவின்படி, மரண தண்டனையும் தண்டனைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகும் மரண தண்டனை இலங்கை சட்டப் புத்தகத்தில் அப்படியே தொடர்ந்தாலும் 1956-ம் ஆண்டு தூக்கு தண்டனையை அப்போதைய பிரதமர் பண்டாரா நாயகே ரத்து செய்து உத்தரவிட்டார். பண்டாரா நாயகே கொல்லப்பட்ட பிறகு 1959-ல் மீண்டும் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் இலங்கையில் அமலுக்கு வந்தது. ஆனால் 1978-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த இலங்கை அதிபர்கள் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பிக்க மறுத்துவிட்டனர்.

42 ஆண்டுகள் கழித்து

சிறுவர் பாலியல் வன்கொடுமை, கொலைகள், போதைப் பொருள் விற்பனை போன்றவை இலங்கையில் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் மரண தண்டனையை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்களால் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டதால் கடந்த ஜூலை 10 அன்று இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்காக மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.

373 தூக்கு தண்டனைக் கைதிகள்

இலங்கையில் கொழும்பு வெலிக்கடை, மஹர, பல்லே கலை, அனுராதபுரம், பதுளை ஆகிய சிறைச்சாலைகளில் தற்போது 373 தூக்கு தண்டனைக் கைதிகள் உள்ளனர். இதில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வியாபாரிகள் 18 பேர்களை தூக்கிலிட இலங்கை சிறைத்துறை சார்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தூக்கிலிடும் பணிக்கு புதிய நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அறிவிப்பினை 2015-ம் ஆண்டு இலங்கை சிறைத்துறை அறிவித்தபோது இதற்காக 24 பேர் விண்ணப்பித்து 14 பேர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். இதில் இரண்டு பேர் தேர்வு நியமண உத்தரவு வழங்கப்பட்டும் பணிக்கு வரவே இல்லை. தற்போது காலியாக உள்ள தூக்கிலிடுபவர் பணிக்கான ஆள்தேர்விற்கான அறிவிப்பு அடுத்த வாரம் நடைபெறும் என இலங்கை சிறைத்துறை ஆணையாளர் துஷாரா உப்பில்டேனியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தூக்கிலிடும் பணிக்கு இலங்கையில் ஆள் கிடைக்காத பட்சத்தில் தூக்கிலிடும் வேலைக்கு 71 வயதான மூதாட்டி ஒருவர் ஒருவர் தானாக முன்வந்துள்ளார்.

இது குறித்து இலங்கையிலுள்ள புத்தளம் மாவட்டம் ஆராச்சிக்கட்டு எனும் பகுதியை சேர்ந்த கருணாவதி எனும் 71 வயது மூதாட்டி திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இலங்கையில் போதைப்பொருள் கடத்துபவர்கள், சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கட்டாயம் மரண தண்டனை வழங்க வேண்டும். இலங்கையில் தூக்கிலிடுபவருக்கான பணி நீண்ட ஆண்டுகளாக காலியாகவே உள்ளது. இதற்கு யாரும் விண்ணப்பிக்காததால் குற்றச்செயல்களும் அதிகரித்து வருகின்றன. தூக்கிலிடும் பணிக்கு யாரும் வராவிட்டால் தூக்கு தண்டனை கைதிகளை நானே தூக்கிலிடுகிறேன். இதற்காக எனக்கு அரசு சம்பளம் தரத் தேவையில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை நிறைவேற்றும் இலங்கை அரசின் முடிவுக்கு சர்வதேச பொதுமன்னிப்பு சபை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x