Published : 05 Aug 2014 12:00 AM
Last Updated : 05 Aug 2014 12:00 AM

4 பறக்கும் ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தங்களின் வாகன நிறுத்தங்களில் மேற்கூரைகள் இல்லை

சென்னையில் வேளச்சேரி, மயிலாப்பூர், தரமணி, பெருங்குடி ஆகிய 4 பறக்கும் ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் இடத்தில் மேற்கூரை இல்லாததால் வாகனங்கள் வெயில் மற்றும் மழைக் காலத்தில் வெட்டவெளியில் நிறுத்தப்பட்டு சேதமடைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களின் போக்குவரத்து வசதிக்காக வேளச்சேரியில் இருந்து கடற்கரை வரையில் பறக்கும் ரயில் இயக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் ரயில் நிலையங்களுக்கு தங்கள் சொந்த வாகனங்களில் வந்து வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதற்கு நாள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாள்தோறும் வாகனங்களை நிறுத்த மாத கட்டணமாகமிதி வண்டிக்கு ரூ.75, இருசக்கர வாகனத்துக்கு ரூ.125, காருக்கு ரூ.1,500 வசூலிக்கப்படுகிறது.

ஆனால், கட்டணம் வசூலிக்கும் அளவுக்கு வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த நிழற்கூரைகள் இல்லை. இதனால், வெயில் மற்றும் மழைக் காலங்களில் வாகனங்கள் வெட்ட வெளியில் நிறுத்தப்பட்டு சேதமடைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக என்.கோபாலகிருஷ்ணன், எஸ்.நதியா, சிவசண்முகம் ஆகியோர் >‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் கூறும்போது, ‘‘வேளச்சேரியில் இருந்து கடற்கரை வரையில் சென்று வருவதற்கு மாதந்தோறும் சீசன் டிக்கெடுக்கு ரூ.120 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே சமயத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த ரூ.125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த மேற்கூரை வசதி கூட இல்லை. இதனால், வெயில் மற்றும் மழையில் வாகனங்கள் நாசமாகின்றன. திருவான்மியூர், இந்திராநகர், கிரீன்வேஸ் சாலை, மந்தைவெளி ஆகிய ரயில் நிலையங்களில் அடித்தளத்திலேயே பார்க்கிங் வசதி உள்ளதால் வாகனங்கள் பாதுகாப்பாக உள்ளன. ஆனால் வேளச்சேரி, மயிலாப்பூர், தரமணி, பெருங்குடி ஆகிய இடங்களில் வாகனங்கள் வெளியில்தான் நிறுத்தப்படுகின்றன’’ என்றனர்.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வாகனங்களை நிறுத்துவதற்கு டெண்டர்விடப்பட்டு பின்னர், தேர்வு செய்துதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையங்களில மேற்கூரைகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x