Last Updated : 16 Jul, 2018 11:00 AM

 

Published : 16 Jul 2018 11:00 AM
Last Updated : 16 Jul 2018 11:00 AM

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு நாள்: குழந்தைகளை இழந்த பெற்றோர் கண்ணீர் அஞ்சலி

 கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14 -ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி தீ விபத்துஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த துயரச்சம்பவம் நடைபெற்று 14 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை காலை குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் அவரவர் வீட்டில் குழந்தைகளின் படங்களுக்கு மாலை அணிவித்து, அவர்களுக்கு பிடித்த தின்படங்களை வைத்து படையலிட்டனர்.

 

இந்துக்களின் பெருமாண்டி இடுகாட்டில் உள்ள குழந்தைகளின் சமாதிகளில் இனிப்புகள் மற்றும் அவர்களுக்கு பிடித்த உணவை வைத்து வழிபட்டனர். கிறிஸ்தவர்கள் கருப்பூர் அன்னம்மாள் கல்லறையில் உள்ள சமாதியில், அவர்களுக்கு பிடித்தவைகளை வைத்து வழிபட்டனர்.

பின்னர் தீ விபத்து நிகழ்ந்த கிருஷ்ணா பள்ளி முன் பெற்றோர்கள் கூடினர். அங்கு பள்ளி வளாகத்தில் 94 குழந்தைகளின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தனர்.

மேலும் பெற்றோர்கள் மலர் தூவியும், குழந்தைகளின் படங்களை பார்த்து கதறி அழுதனர்.

 

தீ விபத்தில் படுகாயமடைந்த குழந்தைகள், குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

பள்ளியிலிருந்து பெற்றோர்கள் சார்பில் ஊர்வலமாக புறப்பட்டு பாலக்கரையில் உள்ள குழந்தைகள் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் இன்று நடைபெறுகிறது.

பின்னர், மாலை பள்ளியிலிருந்து பெற்றோர்கள் அகல் தீபம் ஏற்றி ஊர்வலமாக சென்று மகாமக குளக்கரையில் மோட்சதீபம் ஏற்றவுள்ளனர்.

இதுமட்டுமின்றி இறந்த குழந்தைகளின் உறவினர்கள், தீ விபத்தின் போது படித்த மாணவர்கள், அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள், தன்னார்வ அமைப்பினர், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x