Published : 20 Jul 2018 06:34 PM
Last Updated : 20 Jul 2018 06:34 PM
இலங்கையின் ஹம்பந்தோட்டா வனப்பகுதயில் 30க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகளுடன் வலியால் அவதிப்பட்ட யானை ஒன்று வனத்தை விட்டு மக்கள் வசிக்கும் பகுதிக்கு மருத்துவ உதவிக்காக மனிதர்களைத் தேடி வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று வகையான ஆசிய யானைகளில் இலங்கை யானையும் ஒன்று. 1986-ம் ஆண்டிலிருந்து இலங்கை யானை அருகி வரும் இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் யானைகளைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். குற்றம் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டால் 2 முதல் 5 வருடங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
இலங்கையில் ஆண்டுக்கு சராசரியாக யானைகள் பிறப்பு விகிதம் 100 என்றாலும் 250 யானைகள் வரையிலும் ஆண்டொன்றுக்கு மரணமடைகின்றன. இதில் துப்பாக்கிச் சூடு, நஞ்சூட்டல், மின்சாரத் தாக்குதல், பொறியில் சிக்கிக் கொள்ளுதல் உள்ளிட்ட மனித செயற்பாடுகளினால் ஆண்டுதோறும் 200 யானைகள் கொல்லப்படுகின்றன. இதனால் யானைகளைக் காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்து வருகின்றது.
இந்நிலையில் இலங்கையில் சுற்றுலாப் பகுதியான ஹம்பந்தோட்டவில் அதன் அருகே இருந்த வனப்பகுதியிலிருந்து துப்பாக்கி குண்டுகள் உடம்பில் பாய்ந்த நிலையில் மிக மோசமாக காயம் அடைந்த யானை ஒன்று உதவிக்காக மக்கள் வசிக்கும் பகுதியை நோக்கி வந்தது. குண்டு பாய்ந்த நிலையில் காயமடைந்த யானையைப் பார்த்த அப்பகுதி மக்கள் உள்ளுர் கால்நடை மருத்துவருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
யானையைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், ''30க்கும் மேற்பட்ட குண்டுகள் யானையின் உடலைத் துளைத்திருக்கின்றன. யானையின் இரண்டு கண்கள் அருகேயும், காது மடலிலும் கூட குண்டு காயங்கள் உள்ளன. குண்டுபட்ட இடங்களில் சீழ் வடிகிறது. குண்டு காயங்களிலிருந்து குணமடைய ஆறு மாதங்களாகவது கட்டாய சிகிச்சை அளித்தாக வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து இலங்கை வனத்துறையினர், ''யானை வேட்டையர்களால் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய யானையை சுலபமாக அடையாளம் காண முடியாது. துப்பாக்கி குண்டினால் காயமடைந்த யானை சோர்வடைந்த நிலையில், நொண்டி நொண்டி பெரும்பாலும் வனப்பகுதிக்குள் உள்ள நீர்நிலையை ஒட்டியே வசிக்கும். மனிதர்களால் காயமடைந்த யானை மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வருவது என்பது அரிதானது மட்டுமின்றி ஆச்சரியமானதும் கூட. காயமடைந்த யானை மேல் சிகிச்சைக்காக யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது'' என்றனர்.
'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT