Published : 05 Aug 2014 03:42 PM
Last Updated : 05 Aug 2014 03:42 PM
பொள்ளாச்சி அருகே மாதம் ரூ.1 வாடகையில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி, சேத்துமடையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதி சர்க்கார்பதி. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான இங்கு சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையமும், அதை ஒட்டியே பி.ஏ.பி. திட்டத்தின் முக்கியக் கால்வாயான பீடர் கால்வாயின் தொடக்கமும் உள்ளன.
அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைவாழ் கிராமத்தில் பழங்குடி குழந்தைகளின் கல்விக்காக இயங்கும் பள்ளிக்குச் சொந்தமாக கட்டிடம் இல்லை. ஆண்டுகள் பல கடந்தும் மின் வாரியத்திற்குச் சொந்தமான இடத்திலும், கட்டிடத்திலும் மாறி மாறி பயணிக்கிறது இந்த பள்ளி.
ஊழியர்கள், மலைவாழ் மக்கள் அனைவரது குழந்தைகளும் பயிலும் வகையில் 1964-ல் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது இங்கு பழங்குடியின குழந்தைகள் 19 பேர் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் ஒருவரும், உதவி ஆசிரியர் ஒருவரும் பணியாற்றி வருகின்றனர்.
மின்வாரிய இடத்தில் கொட்டகையில் செயல்பட்டு வந்த பள்ளிக் கட்டிடம் சேதமடைந்திருந்ததால் கடந்த ஆண்டு மின்வாரிய ஆய்வு மாளிகைக்கு பள்ளி மாற்றப்பட்டது. தலைமையாசிரியர் மற்றும் கல்வித் துறையினரின் முயற்சியால் அந்த கட்டிடம் மாத வாடகை ரூ.1-க்கு பெறப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் பெரும்பாலும் இருந்தாலும், பள்ளிக்கு சொந்தக் கட்டிடம் தேவை, தற்போதைய அவசரத் தேவையாக பள்ளிக் கட்டிடத்தின் பின்புறமுள்ள சேதங்களை சரி செய்ய வேண்டும். முறையான விளையாட்டு உபகரணங்கள் வேண்டும். சமையல் அறை வேண்டும் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிக் கட்டிடம் ஓரளவிற்கு தரமானதாக இருந்தாலும், வன விலங்குகள் அடிக்கடி வந்து போகும் பகுதி என்பதால் பாதுகாப்பு வசதிகள் வேண்டும் என்பது இவர்களது முக்கியமான கோரிக்கையாக உள்ளது. குறைந்தபட்சம் சுற்றுச்சுவர் கட்ட கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கின்றனர் மலைவாழ் மக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT