ஊட்டி ராஜ்பவனில் இரு தினங்கள் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. படம்: ஆர்.டி.சிவசங்கர்
ஊட்டி ராஜ்பவனில் இரு தினங்கள் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. படம்: ஆர்.டி.சிவசங்கர்

2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதே நோக்கம்: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

Published on

2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

ஊட்டியில் நேற்று முன்தினம் துணைவேந்தர்கள் மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கிவைத்தார். இரண்டு நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 35 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில், மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

இந்த மாநாட்டின் மூலமாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களிடையே ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கடமை உங்களுக்கு உள்ளது. மாணவர்கள்தான் தேசத்தின் சொத்து.

இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் உள்ள இளைஞர்கள் திறனற்றவர்களாக இருந்தால், நாட்டுக்கு சுமையாகி விடும். பல நாடுகள் நம்மைவிட முன்னேறியுள்ளன. எனவே, நம்மிடம் உள்ள அறிவாற்றலை ஒருங்கிணைக்க வேண்டும். அப்போது புதிய சிந்தனைகள் பிறக்கும்.

தற்போது செயற்கை நுண்ணறிவு பெரிதும் வளர்ச்சியடைந்து வருகிறது. இதன் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் விளக்க வேண்டும். நாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அவர்களைப் பயிற்றுவிக்கவும், சிறந்த திறனைக் கொடுக்கவும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் உதவியாக உள்ளது. ஆனால், இதைப் பயிற்றுவிக்கத் தகுதியான, திறமையான பயிற்றுநர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். பேச்சுக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்வதாக கேள்விப்படுகிறேன். அவர்களை திறமையான மாணவர்களாக மாற்ற செயற்கை நுண்ணறிவு வரப்பிரசாதமாக இருக்கும்.

புதிய தொழில்நுட்பங்கள் பெரிதும் வளர்ந்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் வரிசையில் நானோ ரோபோடிக்ஸ் பெரிதும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் மூலம் மனித மூளை மற்றும் உடல் உறுப்புகளை உருவாக்கி வருகிறார்கள். இந்த மாநாட்டில் கிடைத்த புதிய சிந்தனை மற்றும் அறிவு சார்ந்த விஷயங்களை மாணவர்களை மெருகேற்ற பயன்படுத்துங்கள். 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறோம். அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும். இது போன்ற மாநாடுகள் இனியும் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in