

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கும் அவருக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் கடந்த 2024 ஜூன் மாதத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கூறி, அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமி, கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராகுமாறு இபிஎஸ்-க்கு சம்மன் அனுப்பியது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் இபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்தும் அவருக்கு விலக்கு அளித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் 4 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு கே.சி.பழனிசாமிக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.