Published : 14 Jul 2018 09:11 AM
Last Updated : 14 Jul 2018 09:11 AM
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலைப்போல், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் அம்மன் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் தாய்மார்களுடைய குழந்தைகள் பசியால் அழுவதைத் தடுக்க, கோயில் நிர்வாகம் சார்பில் இலவசமாக பசும்பால் வழங்கும் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் 25 ஆயிரம் பேர் வரை உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில் 50 ஆயிரம் பேர் முதல் ஒரு லட்சம் பேர் வரை வருகின்றனர்.
கோயிலில் காலை 5.30 மணிக்கு தொடங்கும் பூஜைகள் நண்பகல் 12.30 மணி வரையும், விசேஷ நாட்களில் பிற்பகல் 1.30 மணி வரையும் நடைபெறும். மீனாட்சி அம்மனை பக்தர்கள் இலவசமாகவும், 20 ரூபாய் மற்றும் 100 ரூபாய் கட்டணத்திலும் தரிசனம் செய்வர்.
இந்த வரிசையில் தாய்மார்கள் கைக் குழந்தைகள் முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளுடன் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு கட்டத்துக்கு மேல் அந்த குழந்தைகள் வயிற்றுப் பசிக்காக அழத் தொடங்கும். அதனால் சுவாமி சன்னதி அருகே குழந்தைகள் அழுகுரலாகவே முன்பு கேட்கும். இதனால் குழந்தைகளின் அழுகுரலை நிறுத்த முடியாமலும், சுவாமி தரிசனம் செய்ய முடியாமலும் பெண்கள் தவிப்பர்.
அதனால், திருப்பதி கோயி லைப் போல மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகமும் சுவாமி தரிசனத்துக்காக காத்திருக்கும் தாய்மார்களின் குழந்தைகளுடைய பசியைப் போக்க பசும்பால் வழங்கும் திட்டத்தை விளம்பரமின்றி தொடங்கி, அந்த திட்டம் பக்தர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தினமும் 20 லிட்டர் பால்
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் நடராஜன் கூறுகையில், ‘‘குழந்தைகள் பசியால் துடிக்கும்போது அதை தாய்மார்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால், அவர்களால் சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும். அது அவர் களுடன் வந்தவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் பசியால் அழுவதைத் தடுக்க இந்த திட்டத்தை தொடங்கினோம். மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பசு மடத்தில் 60 பசுமாடுகள் உள்ளன. அதி லிருந்து சுவாமி அபிஷேகம், அன்னதானத்துக்கு பால் பெறப் படுகிறது. தற்போது குழந்தைகளுக்காகவும் இந்த பசும்பாலை பயன்படுத்துகிறோம்.
குழந்தைகளுக்கு பால் வழங்குவதற்காகவே ஒரு பெண் பணியாளரை நியமித்துள்ளோம். அவர் வரிசையில் நிற்கும் தாய்மார்களுடைய குழந்தைகளுக்கு பால் ஊற்றிக் கொடுப்பார். தின மும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக 20 லிட்டர் வரையும் சில நேரங்களில் அதற்கு மேலும் பால் தேவைப்படுகிறது. தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்க விரும்பினால் அருகேயே தாய்ப் பால் புகட்டும் அறையும் அமைத்துக் கொடுத்துள்ளோம்.
இந்த ஏற்பாட்டால் அம்மன் சன் னதி அருகே குழந்தைகளுடைய அழுகுரல் தற்போது கேட்பதில்லை. அனைவரும் நிம்மதி யாக சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT