Published : 05 Jul 2018 01:30 PM
Last Updated : 05 Jul 2018 01:30 PM
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த அறிக்கையில், மாநிலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்களின் எண்ணிக்கை ஓரளவுக்கு குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக 11,625 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2017-ம் ஆண்டில், 10,677 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. ஆனால், கடந்த 2016-ம் ஆண்டைக் காட்டிலும், குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெறும் விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. பெரும்பாலான வழக்குகள் போலீஸார் விசாரணையிலும், நீதிமன்ற விசாரணையிலும் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றைத் தடுக்க கடுமையான நடவடிக்கை அவசியம், அதற்குத் தேவையான வழிகாட்டி நெறிமுறைகளை உயர் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி, வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம் என்பவர் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹுலுவாடி ஜி ரமேஷ், எம். தண்டபாணி ஆகியோர் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பதிவான வழக்குகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இதன்படி, தமிழகத்தின் தலைமைச் செயலாளர், சட்டம் ஒழுங்கு போலீஸ் டிஜிபி சார்பில் நேற்று இரு உயர்அதிகாரிகள் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம் பெற்றிருந்தன. அது குறித்த விவரம் வருமாறு.
2016-ம் ஆண்டு
கடந்த 2016-ம் ஆண்டில், தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் 11 ஆயிரத்து 625 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 257 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அந்த ஆண்டில் குற்றவாளிகளை அரசு தரப்பு நிரூபிக்க முடியாமல், முறையாக விசாரிக்காமல், ஆதாரங்களைத் திரட்டாமல், விடுதலை செய்யப்பட்ட அளவு மிக அதிகமாகும். அந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்து 244 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போதுமான ஆதாரங்களை அரசுத் தரப்பு தாக்கல் செய்யவில்லை எனக் கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2016-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில் 1002 வழக்குளில் இன்னும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர், 5 ஆயிரத்து 239 வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது, 1922 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக நீதிமன்ற உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. மேலும், அந்த ஆண்டில் மட்டுமே 1961 வழக்குகள் நீதிமன்றத்துக்கு வராமல், பல்வேறு வழிகளில் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
2017-ம் ஆண்டு
இதேபோல 2017-ம் ஆண்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக 10 ஆயிரத்து 677 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 121 வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டவர்களுக்கு எதிராக அரசு தரப்பு முறையாக வாதாடி, ஆதாரங்களை நிரூபித்து தண்டனைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
கடந்த 2016-ம் ஆண்டில் 244 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்ட நிலையில், அது 2017-ம் ஆண்டில் 121 வழக்குகளாகக் குறைந்துவிட்டது.
இந்த அளவு அரசுத் தரப்பு முறையாக, திறமையாகச் செயல்படவில்லை, போலீஸார் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான வலுவான ஆதாரங்களைத் திரட்டவில்லை, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிடவில்லை என்பதையே காட்டுகிறது. மேலும், இந்த ஆண்டில் 366 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைத்துக் குற்றங்களிலும் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் நீதிமன்றத்துக்கு வராமல் 1468 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டம் மோசம்
மாவட்ட அளவில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நடந்த குற்றங்கள் குறித்த தரவுகளை ஆய்வு செய்யும்போது, தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது என்பது தெரிய வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு நெல்லையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்களில் ஆயிரத்து 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டு இது ஆயிரத்து 138 ஆக உயர்ந்துள்ளது.
நடப்பு 2018-ம் ஆண்டு தொடங்கிய முதல் 4 மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 383 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதுரைக்கு 2-ம் இடம்
இதற்கு அடுத்ததாக மதுரை மாவட்டம் இருக்கிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் மொத்தம் 977 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 832 வழக்குகளும், விழுப்புரத்தில் 826 வழக்குகளும், சென்னையில் 710 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2017-ம் ஆண்டு தரவுகளை ஆய்வு செய்யும் போது, விழுப்புரம் மாவட்டம் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டில் 831 வழக்குகளும், 3-வது இடத்தில் மதுரை மாவட்டத்தில் 713 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து சென்னையில் 663 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2018-ம் ஆண்டு
நடப்பு 2018-ம் ஆண்டில் முதல் 4 மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் 383 வழக்குகளும், சென்னை நகரில் 267 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 245 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 244 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் நெல்லை மாவட்டத்தில்தான் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகவும், அவர்களின் நிலை மோசமாகவும் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படும் அளவு குறைவாக இருக்கிறது. அதேசமயம், குற்றங்களில் போதுமான ஆதாரங்கள் இன்றி குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது.
எங்கே செல்கிறது?
கடந்த 2016-ம் ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் வெறும் 6 வழக்குகளில் மட்டும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 124 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களைத் தடுக்க தமிழக அரசும், போலீஸாரும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் விளைவாக கடந்த 2016-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைக் காட்டிலும், 2017-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை ஆயிரம் வழக்குகள் வரை குறைந்துள்ளது. ஆனால், அரசுத் தரப்பில் வலுவாக செயல்படாத காரணத்தால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகத் தண்டனை பெற்றுத் தருவதும் குறைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT