வடக்கே இருந்து வரும் எதிர்ப்புகளுக்கு உரிய பதிலடி: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து

வடக்கே இருந்து வரும் எதிர்ப்புகளுக்கு உரிய பதிலடி: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து

Published on

சிவகாசி: வடக்கே இருந்து வரும் எதிர்ப்புகளுக்கும், உள்ளுக்குள் இருந்தே அவர்களுக்கு உதவும் மூன்றாம் படைகளுக்கும் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று திமுக பாசறைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

சிவகாசியில் திமுக மருத்துவர் அணி சார்பில் சமூக நீதி மற்றும் பகுத்தறிவுப் பாசறைப் பயிற்சிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநில மருத்துவர் அணிச் செயலாளர் எழிலன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: போர் மற்றும் படையெடுப்புக் காலத்தில் எதிரிகளிடம் இருந்து காக்கவே பாசறைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது, வடக்கே இருந்து வரும் எதிர்ப்புகளுக்கும், இங்கேயே இருந்து கொண்டு வடக்கே இருந்து வரும் எதிர்ப்புகளுக்கு உதவுவோருக்கும் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.

இது அரசியல் எதிரிகளுக்கும், நமக்கும் இடையே நடக்கும் தேர்தல் மட்டுமல்ல, கொள்கை எதிரிகளுக்கு இடையேயான தேர்தல். தமிழகத்தில் வடவர் ஆதிக்கத்தை அடியோடு முறியடித்த வரலாறு இருந்தாலும், மீண்டும் ஒருமுறை மொழித் திணிப்பு, சமூக நீதி மறுப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பன்முகத் தன்மையை ஒழிக்கும் சக்திகளை வேரறுக்கக் கூடிய போராட்டக் களமாக 2026 சட்டப்பேரவைத் தேர்தல் இருக்கும். அதற்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள இதுபோன்ற பாசறைக் கூட்டங்கள் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், திராவிடர் கழகப் பிரசாரச் செயலாளர் அருள்மொழி, மாநகர் திமுக செயலாளர் உதயசூரியன், மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் செண்பகராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in