Published : 16 Apr 2025 04:20 AM
Last Updated : 16 Apr 2025 04:20 AM

மக்களின் அடிப்படை உரிமைகளை கூட மத்திய அரசிடம் போராடி பெற வேண்டியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் கருத்து

சென்னை: மாநிலங்களி்ன் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருவதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் மாநில சுயாட்சி தொடர்பான அறிவிப்பில் அவர் பேசியதாவது: நம் நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள மக்கள் வாழும் நம் இந்திய நாட்டில் இந்த மக்களுக்கென்று அதை பாதுகாக்கின்ற அரசியல் சட்ட உரிமைகளும் உள்ளன.

மக்களின் நலன்களை போற்றி பாதுகாக்கும் வகையில், அதற்கான அரசியல் அமைப்பையும், நிர்வாக அமைப்பையும் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கியவர்கள், ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக இல்லாமல், கூட்டாட்சி கருத்தியலை, நெறிமுறைகளை கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக உருவாக்கினார்கள்.

ஆனால், இன்று மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே மத்திய அரசிடம் போராடி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம்.

மத்திய - மாநில அரசின் உறவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து கடந்த 1971-ம் ஆண்டு ராஜமன்னார் குழு வழங்கிய முக்கிய பரிந்துரைகளை 51 ஆண்டுகளுக்கு முன்பே, 1974-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி இதே சட்டப்பேரவையில் தீர்மானமாகவும் கருணாநிதி நிறைவேற்றினார். ஆனால், இதுநாள் வரையில் எந்தவித மாற்றமுமின்றி ஏமாற்றமே தொடர்கிறது.

அடுத்தடுத்து மாநில பட்டியலிலுள்ள மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை ஒத்திசைவு பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே விரைவாக இன்றைய மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீட் தேர்வு மூலம் பொதுக் கல்வி முறையை சிதைப்பதையே நாம் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் ‘சமக்ர சிக்சா அபியான்’ திட்டத்தின் மூலம் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய சுமார் ரூ.2,500 கோடியை விடுவிக்காமல் தமிழக மாணவர்களின் நலனை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

பெரும் பங்​களிப்பு: மத்திய அரசின் வரி வருவாயில் பெரும் பங்களிப்பை தமிழகம் தரும்போதிலும், நாம் பங்களிக்கக்கூடிய ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே நமக்கு நிதிப்பகிர்வாக அளிக்கப்படுகிறது. இயற்கை சீற்றங்களால் தமிழகம் பாதிக்கப்பட்ட போதெல்லாம்கூட உரிய இழப்பீடுகள், தகுந்த ஆய்வு மற்றும் அளவீடுகள் செய்த பின்னரும், பல முறை வலியுறுத்தியும் நிதி வழங்கப்படவே இல்லை.

மக்கள்தொகை கட்டுப்பாடு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பிறப்பு சதவீதம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அதனை தண்டிக்கும்விதமாக 2026-ம் ஆண்டு நடைமுறைப்படுத்த கருதி இருக்கக்கூடிய மக்களவை தொகுதிகள் மறுவரையறையினால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கூட்டாட்சிக் கருத்தியலுக்கு எதிராக ஒன்றிய அரசு நடந்துகொள்ளும் போதெல்லாம் அதற்கு எதிராக தமிழகம் தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வருகிறது.

இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் நாம் இயற்றிய சட்டமுன்வடிவுகள் மீது உரிய ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்திய தமிழ்நாடு ஆளுநரின் செயலை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்து, சமீபத்தில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளை காக்கும் வகையில் கூட்டாட்சிக் கருத்தியலின் மகத்துவத்தை நாடெங்கும் பரப்பிடும் வகையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x