Published : 16 Apr 2025 04:25 AM
Last Updated : 16 Apr 2025 04:25 AM
சென்னை: மாநில சுயாட்சி தொடர்பான முதல்வரின் அறிவிப்பு குறித்து சட்டப்பேரவையில் திமுக, பாஜக, காங்கிரஸ் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதம் வருமாறு:
பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன்: இந்தியாவின் மாநிலங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளன என்று அம்பேத்கர் தெரிவித்துள்ளார். மொழிவாரி மாநிலத்தில் அவருக்கு விருப்பம் இருந்ததாகத் தெரியவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ அவர் ஒத்துக்கொள்ளவில்லை.
அந்தந்த மாநில வரிவருவாயில் 50 சதவீதம் நேரடியாக கொடுக்கப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீதத்தில் 29 சதவீதம் மாநில அரசுக்கு கொடுக்கப்படுகிறது. இதைத்தான் முதல்வர், ஒரு ரூபாயில் 29 சதவீதம் கிடைப்பதாக தெரிவிக்கிறார். அனைத்து மாநில முதல்வர்கள், நிதியமைச்சர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான் ஜிஎஸ்டி கவுன்சில். இந்த ஜிஎஸ்டி கவுன்சில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது.
காங்கிரஸ் உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை: காங்கிரஸ் கட்சி ஜிஎஸ்டி-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லியது. ஆனால், அந்த ஜிஎஸ்டி வேறு. இப்போதுள்ளது வேறு. ஐசியுவில் இருப்பவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி உள்ளது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: ஜிஎஸ்டியில் 50 சதவீதம் என்பது எல்லாம் கிடையாது. பொருட்களைப் பொறுத்து ஜிஎஸ்டி மாறுபடுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலில் பெயருக்குதான் உறுப்பினராக இருக்கிறோம்.
நயினார் நாகேந்திரன்: காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் 2010-ம் ஆண்டு நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது.
கு.செல்வபெருந்தகை: காங்கிரஸ் நீட் தேர்வை கொண்டு வரவில்லை. உச்ச நீதிமன்றம் கொண்டு வந்தது.
நயினார் நாகேந்திரன்: அப்போது காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. மும்மொழிக் கொள்கையில் இந்தி திணிப்பு என்கிறார்கள். இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை எடுங்கள் என்றுதான் சொல்லப்படுகிறது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரியில் பெரும்பாலும் மலையாளம் பேசுகின்றனர். மலையாள மொழிக்கு பள்ளிக்கூடம் இல்லை. அதற்காக நான் கொண்டு வரவேண்டும் என்று சொல்லவில்லை. அதேபோல், தெலுங்கு பேசுபவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
பேரவை தலைவர் மு.அப்பாவு: எல்லா மாநிலத்திலும் எல்லா மொழி பேசுகிறவர்களும் உள்ளனர். எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை இல்லை.
நயினார் நாகேந்திரன்: இந்திய நாடு வல்லரசு நாடாக மாறும் சூழ்நிலையில், ஒட்டுமொத்த சுயாட்சி வரும்போது, நாட்டின் வலு குறைய வாய்ப்புள்ளது. எது வேண்டுமானாலும், மத்திய அரசிடம் கேட்டு, பேசி முடிவு எடுக்க வேண்டும். அதைத் தவிர்த்து, ஒட்டுமொத்தமாக சுயாட்சி வேண்டும் என்று கேட்பது நியாயம் இல்லை. அதனால், முதல்வர் கொண்டு வந்த விதி 110-ஐ ஏற்க இயலாது. வெளிநடப்பு செய்கிறோம்.
(தொடர்ந்து, பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.)
விசிக உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி: மாநில அரசுகள் மக்களுக்கு பதில் கூறக் கடமைப்பட்டுள்ளது. அந்த அரசு சுயாட்சி படைத்த அரசாக இருக்க வேண்டும். அதிகாரமும், பொறுப்பும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் சொல்லியுள்ளார். அம்பேத்கரின் கருத்து மாநில சுயாட்சிக்கு ஆதரவானது.
திமுக உறுப்பினர் நா.எழிலன்: பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மொழிவாரி மாநிலத்துக்கு அம்பேத்கர் எதிரானவர் என்ற தவறான கருத்தை தெரிவித்துள்ளார். முதலில் மொழிவாரி மாநிலம் பிரச்சினை வரும்போது, அம்பேத்கர் மாறுபட்ட கருத்து உடையவராக இருந்தார். பிறகு, மொழிவாரி மாநிலத்துக்கு அம்பேத்கர் ஆதரவு தெரிவித்தார்.
அப்போது, ‘முதலில் மொழிவாரி மாநிலத்துக்கு எதிர்ப்பாக இருந்த நீங்கள், இப்போது ஆதரவாக இருக்கிறீர்களே?’ என்று அம்பேத்கரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘கழுதையின் நிலைப்பாடுதான் பிடிவாத குணத்துடன் இருக்கும். நான் மனிதன். பகுத்தறிவு சிந்தனை உள்ளவன். படித்தவன். அதனால், நான் முழுமையாக மொழிவாரி மாநிலத்தை ஆதரிக்கிறேன்’ என்று தெரிவித்தார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...