Last Updated : 15 Apr, 2025 08:28 PM

3  

Published : 15 Apr 2025 08:28 PM
Last Updated : 15 Apr 2025 08:28 PM

“கலவரத்தை தூண்டி 2026 தேர்தலில் வெற்றி பெற திமுக கூட்டணி சதி” - வேலூர் இப்ராகிம் குற்றச்சாட்டு

வேலூர் இப்ராஹிம் | கோப்புப்படம்

மதுரை: “தமிழகத்தில் வக்பு திருத்த சட்டத்தை வைத்து இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இடையே கலவரத்தை தூண்டி 2026 தேர்தலில் வெற்றி பெற திமுக கூட்டணி சதி செய்து வருகிறது” என்று பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராகிம் குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பாஜக சார்பில் வக்பு திருத்த சட்ட ஆதரவு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய தலைவர் வேலூர் இப்ராகிம் பங்கேற்பதாக இருந்தது. இதற்காக வேலூர் இப்ராகிம் இன்று மதுரை வந்திருந்தார். மதுரையிலிருந்து நத்தம் புறப்பட்ட இப்ராகிமை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து வேலூர் இப்ராகிம் செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசின் வக்பு சட்டத் திருத்த சட்டத்தால் வக்பு வாரிய சொத்துகள் பாதுகாக்கப்படும். இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பலன் கிடைக்கும். இருப்பினும் வக்பு திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகிறது. இஸ்லாமியர்களை அச்சுறுத்தி வருகின்றனர். இந்தச் சட்டத்துக்கு எதிராக போராடுமாறு இஸ்லாமியர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் தூண்டி வருகின்றனர்.

இதையடுத்து, பாஜக சார்பில் வக்பு சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்தப்பட்டு இஸ்லாமியர்களிடம் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டங்களில் பேசுவதற்காக செல்லும் என்னை போலீஸார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். பாஜகவினர் முறையாக அனுமதி பெற்று கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் என்னை பங்கேற்க விடாமல் தடுத்து அற்பமான வாக்கு வங்கி அரசியலை தமிழக முதல்வர் செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுக்க இந்துக்கள், இஸ்லாமியர்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தி 2026 தேர்தலில் வெற்றிபெற திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் திட்டமிட்டுள்ளது. இதை பாஜக வேடிக்கை பார்க்காது. தமிழக முழுக்க வக்பு சொத்துக்கள் ஆளும் கட்சியினர் உள்ளனர். மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், அசாம் மாநிலங்களில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்களை போராட தூண்டி வருகின்றனர். இதனால் அங்க வன்முறை நிகழ்ந்துள்ளது.

அதேபோல் அமைதிப்பூங்காவான தமிழகத்திலும் கலவரத்தை தூண்ட சதி செய்து வருகின்றனர். காவல்துறை ஏவல் துறையாக மாறக்கூடாது. போலீஸார் ஜனநாயக முறைப்படி நடந்து கொள்ள வேண்டும். போலீஸாரை வைத்து அடக்குமுறையை ஏவிவிடும் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதுதான் பாஜகவின் வேலை,” என்று அவர் கூறினார். அப்போது, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மாரிசக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x