Published : 15 Apr 2025 01:51 PM
Last Updated : 15 Apr 2025 01:51 PM
சென்னை: “தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் வகுப்பு மாணவர் வீடு புகுந்து வெட்டப்பட்டது, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் பேருந்தை மறித்து அதில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டது என வன்முறை நிகழ்வுகள் தொடர்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது நல்லதல்ல.
இரு மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்குவதில் தான் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது மறந்து, கடந்து போக வேண்டிய மோதல் தான். ஆனால், அதற்காக அரிவாளை வீட்டில் இருந்து பையில் மறைத்து எடுத்து வந்து சக மாணவரை வெட்டும் அளவுக்கு ஒரு மாணவரின் மனநிலை வெறுப்படைந்திருக்கிறது என்றால், அது மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்திலும் அதிகரித்து வரும் சீரழிவையே காட்டுகிறது. இந்தப் போக்கு சரி செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் வகுப்பு மாணவர் வீடு புகுந்து வெட்டப்பட்டது, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் பேருந்தை மறித்து அதில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டது என வன்முறை நிகழ்வுகள் தொடர்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது.
மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களுக்கு நல்வழி காட்டுவது தான் பள்ளிகள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகும். இதை மனதில் கொண்டு பள்ளிகளில் நீதிபோதனை பாடவேளைகளை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்; விளையாட்டுப் பாடவேளையை அதிகரிக்க வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க>> நெல்லை | தனியார் பள்ளியில் மோதல்: மாணவருக்கு அரிவாள் வெட்டு, தடுக்கச் சென்ற ஆசிரியை காயம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...