Published : 15 Apr 2025 05:42 AM
Last Updated : 15 Apr 2025 05:42 AM

“அண்ணாமலை பாஜகவின் மிகப்பெரிய சொத்து” - நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி/சென்னை: அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அச்சப்படுகிறார் என்று, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக சார்பில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் முன்புள்ள அம்பேத்கர் சிலைக்கு நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இழுபறி இல்லாத கூட்டணி: அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர் அம்பேத்கர். ஆனால், அரசியல் சாசன சபையில் அம்பேத்கருக்கு இடம் கொடுக்க காங்கிரஸ் மறுத்தது. அம்பேத்கர் நினைவிடங்களை கூட காங்கிரஸ் பராமரிக்கவில்லை. மத்தியில் பாஜக பொறுப்பேற்ற பின்னர் அம்பேத்கரின் நினைவாலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் புதுப்பிக்கப்பட்டது.

அதிமுக- பாஜக கூட்டணி எந்த இழுபறியும் இல்லாமல் அமைந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. துணை முதல்வர் பதவி உள்ளிட்டவை குறித்து இப்போதைக்கு எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் அச்சப்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்து எங்கே? - நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் முதல்வர் ஸ்டாலின், நமது தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறாமல் அவர்களைப் புறக்கணித்து வருகிறார். மேலும், இந்த ஆண்டும் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனத்தின் ‘ஆவின்’ பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டு வாழ்த்துகள் பதிவிடப்படவில்லை.

ஆங்கிலப் புத்தாண்டுக்கு அகிலத்துக்கெல்லாம் வாழ்த்துமடல் எழுதும் முதல்வருக்கு, ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களின் கலாச்சாரக் கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து கூற மனமில்லையா? ‘தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் கழகம் திமுக’ என விளம்பர வசனம் பேசிக் கொண்டு நமது தாய்த் தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? தொடர்ந்து தமிழர்களின் மத - கலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுகவுக்கு வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அண்ணாமலை மிகப்பெரிய சொத்து: இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணாமலையை யாரும் வெளியேற்ற முடியாது.

அவர் பாஜகவின் மிகப்பெரிய சொத்து. அரசியலில் நீண்ட காலமாக பல விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. என்னைப் பொருத்தவரை, அரசியல் நாகரிகமான முறை யில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் பேசிவிட்டு, நேரடியாக அவருடைய வீட்டுக்குச் சென்றார். அங்கு இரவு உணவருந்திய பிறகுதான் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அந்த நிகழ்ச்சியில் நான், கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x