Published : 14 Apr 2025 06:26 PM
Last Updated : 14 Apr 2025 06:26 PM
திருநெல்வேலி: “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார். ஒவ்வொரு வீட்டு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பொன்முடியின் பேச்சை கவனத்தில் கொண்டு வரும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க வேண்டும்,” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக சார்பில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் முன்புள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நயினார் நாகேந்திரன் அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த நாள் எனக்கு மிகவும் ராசியான நாள். கடந்த 2001 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு நெல்லை எக்ஸ்பிரஸில் சென்னைக்கு புறப்பட்டு சென்றேன்.
அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு நெல்லை சட்டப்பேரவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பை வழங்கினார். அதிலிருந்து 25 ஆண்டுகளான நிலையில் தற்போது பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகத்தின் பாஜக தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பினை எனக்கு வழங்கியுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர் அம்பேத்கர். ஆனால் அரசியல் சாசன சபையில் அம்பேத்கருக்கு இடத்தை கொடுக்க காங்கிரஸ் மறுத்தது. அம்பேத்கர் என்ன செய்தார் என்பதை அனைவரும் அறிய வேண்டும்.
அவரது நினைவிடங்களை கூட காங்கிரஸ் பராமரிக்கவில்லை. மத்தியில் பாஜக பொறுப்பேற்ற பின்னர் அம்பேத்கரின் நினைவாலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் புதுப்பிக்கப்பட்டன. தமிழகத்தில் அம்பேத்கர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சிறைச்சாலையில் அடைப்பதுபோல் கூண்டில் வைத்து அடைத்துள்ளார்கள். இதனை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி எந்த இழுபறியும் இல்லாமல் அமைந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. துணை முதல்வர் பதவி உள்ளிட்டவைகள் குறித்து இப்போதைக்கு எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சை ஒவ்வொரு வீட்டு பெண்மணி மட்டுமல்லாது ஒவ்வொரு வீட்டின் ஆண்மகனும் நினைத்து பார்க்க வேண்டும். 2026-ல் அதனை நினைத்து பார்த்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் பயப்படுகிறார்.
போக்குவரத்து துறை பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியத்துறை என்பதனால் அரசு எடுத்து நடத்துகிறது. போக்குவரத்து துறையில் ஏற்படக்கூடிய நஷ்டத்தை அரசு முறையாக நிதி ஒதுக்கி செய்து நிவர்த்தியாக்கி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...