Published : 14 Apr 2025 01:45 PM
Last Updated : 14 Apr 2025 01:45 PM
சென்னை: பாஜக கூட்டணி அமைந்தால் கட்சியிலிருந்து விலகுவதாக திட்டமிட்ட பொய்ச் செய்தி பரப்பப்படுகிறது. நான் எந்த நேரத்திலும் அவ்வாறு சொல்லவே இல்லை. இது திட்டமிட்ட ஒரு பொய் செய்தி. இதுபோன்ற பொய்ச் செய்திகளைப் பரப்பி அற்ப ஆசை கொள்ள வேண்டாம், என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஏப்.14) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது, என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்திருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பாஜக கூட்டணி அமைந்தால் கட்சியிலிருந்து விலகுவதாக கூறினாரே என்று சொல்லி திருமாவளவன் அவருடைய கருத்தை கூறியிருக்கிறார்.
நான் எந்த நேரத்திலும் அவ்வாறு சொல்லவே இல்லை. இது திட்டமிட்ட ஒரு பொய் செய்தி. இதை திட்டமிட்டு பரப்பி, நான் ஏதோ கட்சியில் இருந்து விலகுவதாகவும் கூறியதுபோல சொல்லப்படுகிறது. நான் எப்போது அவ்வாறு கூறினேன்? அதாவது நான் சொல்லாத, நினைத்துக் கூடப் பார்க்காத செய்தியை, கடந்த 4 நாட்களாக வேண்டுமென்றே சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த செய்தியை பரப்பியதன் மூலம் சில யூடியூப் சேனல்களுக்கு என்னால் ஒரு வருமானம் கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
எங்களுடைய குடும்பம் ஒரு திராவிடக் குடும்பம். எனது தந்தை இந்தி எதிர்ப்புப் போராட்டம், சுதந்திரப் போராட்டம், முன்னாள் முதல்வர் அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டு, மாநகராட்சித் தேர்தலில் இடம் கொடுத்து, கவுன்சிலராக இருந்து, நிலைக்குழுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். துணைத் தலைவராக எம்ஜிஆர் காலக்கட்டத்தில் எனது தந்தை உறுப்பினராக இருந்துள்ளார். அப்படி ஒரு நீண்ட நெடிய திராவிட பாரம்பரியம் எங்களுடையது.
தன்மானத்துடன் வளர்ந்த குடும்பம். பதவிக்காக சென்று யார் வீட்டு வாசலிலும் சென்ற வரலாறு எங்களுடைய குடும்பத்துக்கும், எங்களுக்கும் கிடையாது. அதிமுக என்னை அடையாளம் காட்டியது. ஒரு அந்தஸ்தைக் கொடுத்தது. எனவே, என்னுடைய வாழ்நாள் முழுவதும் பெரியார், அண்ணா, எம்ஜிஆர்,ஜெயலலிதா வழியிலே எங்களது பயணம் நிச்சயமாகத் தொடரும். எனவே, இதுபோன்ற பொய்ச் செய்திகளைப் பரப்பி அற்ப ஆசை கொள்ள வேண்டாம். யார் வீட்டு வாசலிலும் சென்று பதவிக்காக நின்றவன் ஜெயக்குமார் கிடையாது” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...