Published : 14 Apr 2025 12:53 AM
Last Updated : 14 Apr 2025 12:53 AM
சென்னை: திமுகவுடன் பாஜக மறைமுக கூட்டணி என்று விஜய் பொத்தாம் பொதுவாக கூறுவதை பொருட்படுத்த தேவையில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நான் பாஜக மாநில தலைவராக புதிதாக பொறுப்பேற்றாலும், கட்சி தொண்டர்களுடன் கடந்த 9 ஆண்டுகளாக பழகி வருகிறேன். அவர்கள் சுயநலம் இல்லாமல், தேசம், தாய் நாடு, தாய்மொழி பற்று உடையவர்கள்.
‘பாஜக - அதிமுக கூட்டணி அமைந்துவிட்டதால், திமுகவின் வெற்றி உறுதி’ என்பதுபோல அவர்கள் தரப்பில் கூறிக்கொள்ளலாம். ஆனால், அதை தீர்மானிக்க வேண்டியது எஜமானர்களான வாக்காளர்கள்தான். பாஜகவுடன் சேர்ந்ததால்தான் திமுக கடந்த 1999-ல் வெற்றி பெற்றது. அதை யாரும் மறக்க கூடாது.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஓரம்கட்டப்படவில்லை. பழனிசாமியை சந்தித்து பேசவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை வந்தார். எனவேதான் மற்ற தலைவர்களை அழைக்கவில்லை. திமுகவுடன் பாஜக மறைமுக கூட்டணி என்கிறார் தவெக தலைவர் விஜய். எதை வைத்து இப்படி கூறுகிறார் ஒரு பொறுப்பில் உள்ளவர் ஒரு விஷயத்தை சொன்னால், மக்கள் நம்பும் படி இருந்தால்தான் அதை ஏற்றுக்கொள்ள முடியும். எனவே, பொத்தாம் பொதுவாக கூறும் இந்த கருத்தை பொருட்படுத்த தேவையில்லை.
“அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக சேர்க்கப்படுமா” என்று கேட்கிறீர்கள். இதுகுறித்து பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். சட்டப்பேரவையில் அதிமுக, திமுக, பாஜக உறுப்பினர்கள் ஒன்றாக பேசிக்கொள்வோம். ஆனாலும் அவர்கள் கொள்கை வேறு, எங்கள் கொள்கை வேறு.இவ்வாறு அவர் கூறினார்.
பயம் தெரிகிறது: இதனிடையே, நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: நம்மைப் பார்த்து ‘பொருந்தா கூட்டணி’ என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்கள். ஆம், இது திமுகவுக்கு பொருந்தா கூட்டணிதான். ஏனென்றால், மக்களை சுரண்டி கொழுக்கும் முதல்வர் ஸ்டாலினின் அவல ஆட்சியை இந்த கூட்டணிதான் வீட்டுக்கு அனுப்பப்போகிறது. தமிழக பெண்களின் மாண்பை கழுவில் ஏற்றிய கயவர்களை அமைச்சர்களாக கொண்ட கேடுகெட்ட ஆட்சியை இந்த கூட்டணிதான் வேரறுக்கப் போகிறது. இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்க போகிறது. இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் கண்ணில் மரண பயம் தெரிகிறதுபோலும். பதற்றம் வேண்டாம் முதல்வரே. இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. அதுவரை ஆடுங்கள். ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பை யாராலும் மாற்ற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...