Published : 14 Apr 2025 12:46 AM
Last Updated : 14 Apr 2025 12:46 AM
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை 3 நாள் ஆன்மிக பயணமாக நேற்று உத்தரகாண்ட் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து இமயமலை செல்லவும் அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பாஜக அமைப்பு தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதேமேடையில், அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அவருடன் சேர்ந்து, சரத்குமார், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, கரு.நாகராஜன் உள்ளிட்ட பலருக்கும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அண்ணாமலை நேற்று 3 நாள் ஆன்மிக பயணமாக உத்தரகாண்ட் சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று டெல்லி புறப்பட்டு சென்ற அவர், அங்கிருந்து உத்தரகாண்ட் சென்றிருப்பதாக பாஜக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட புனித தலங்களில் அண்ணாமலை வழிபாடு செய்ய இருப்பதாகவும், பின்னர், அங்கிருந்து இமயமலை சென்று, அவர் தியானத்தில் ஈடுபட இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர். 3 நாள் ஆன்மிக பயணம் முடிவடைந்து டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்திக்கவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.
விரதத்தை கைவிட கோரிக்கை: இதனிடையே அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற உறுதியோடு, கடந்த 4 மாதங்களாக, நான் உட்பட தமிழக பாஜக சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றும் என்ற உறுதியுடன், காலணி அணியத் தொடங்கியிருக்கிறேன்.என்னுடன் விரதம் மேற்கொண்டு வந்த தமிழக பாஜக சகோதர சகோதரிகள், கடின உழைப்பை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, அண்ணன் நயினார் நாகேந்திரனின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, அனைவரும் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...