Published : 13 Apr 2025 07:03 PM
Last Updated : 13 Apr 2025 07:03 PM

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாபயணிகளால் போக்குவரத்து நெரிசல் - நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்

போக்குவரத்து நெரிசலால் வரிசையில் காத்திருந்த வாகனங்கள்

சென்னை: தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை உள்ளது. வார விடுமுறை நாட்கள் மற்றும் வாரவிடுமுறையுடன் சேர்ந்து வரும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இந்நிலையில், மகாவீர் ஜெயந்தி, சனி, ஞாயிறு வாரவிடுமுறை, சித்திரை முதல் தேதி தமிழ் புத்தாண்டு விடுமுறை என தொடர்ந்து அரசு விடுமுறை தினங்களால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த நான்கு நாட்களாக அதிகரித்து காணப்பட்டது.

தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடக, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் அதிக எண்ணிக்கையில் வருகை புரிந்தனர். கடந்த சில தினங்களாக கோடைமழை காரணமாக சீதோஷ்ணநிலை ரம்மியமாக காணப்பட்டது. இயற்கை எழிலை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர். மோயர் பாய்ண்ட், குணாகுகை, தூண்பாறை, பைன்மரக்காடுகள், பசுமை பள்ளத்தாக்கு சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனர். 12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள சுற்றுலாத் தலங்களை காண அதிக வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், பிரையண்ட்பூங்காவை கண்டும் ரசித்தனர். இதனால் ஏரிச்சாலையை சுற்றியும் வாகனங்கள் அதிகம் நிறுத்தப்பட்டிருந்தன. கடும் போக்குவரத்து நெரிசலால் ஒரு நாள் சுற்றுலா வந்தவர்கள் முழுமையாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத்தலங்களை சுற்றிப்பார்க்க முடியாதநிலை ஏற்பட்டது.

கொடைக்கானல் தூண்பாறை பகுதியில் உள்ள யானை சிற்பங்களை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்.

வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. விரைவில் பார்க்கிங் வசதியை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

கொடைக்கானலில் நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக இரவில் 19 டிகிரி செல்சியசும் நிலவியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் இதமான தட்பவெப்பநிலையை உணர்ந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x