Published : 13 Apr 2025 06:43 PM
Last Updated : 13 Apr 2025 06:43 PM
நத்தம்: பாஜக-அதிமுக கூட்டணி அறிவிப்பு, தமிழக வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கவரப்பட்டி கிராமத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்க வருகைதந்த ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "திமுக அரசை அகற்ற உறுதியான கூட்டணி தேவை என்ற நிலையில், மத்தியில் பாஜக மாநிலத்தில் அதிமுக என்ற கூட்டணி அறிவிப்பு தமிழக வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாக திமுக உள்ளது. மாற்றம் உறுதி என்று மக்கள் தீர்மானித்து இருக்கிறார்கள் அதற்கு அதிமுக-பாஜக கூட்டணி நம்பிக்கைக்கு உரிய கூட்டணியாக வரும் நாட்களில் வலம் வரும்.
மக்களின் வரிப்பணத்தை டாஸ்மாக் மூலம் தவறாக கையாண்டு டாஸ்மாக் ஊழல் நடந்தது வெட்ட வெளிச்சமாகி விசாரணை நடந்து வருகிறது.
பொறுப்பற்ற முறையில் அமைச்சர் பேசுவதும் அதை ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்ப்பதும் வெட்கக்கேடு. ஆபாச வார்த்தைகளை, காதில் கேட்க முடியாத வார்த்தைகளை பேசியவர் கட்சி பொறுப்பில் இருந்து மட்டும் நீக்கம் செய்யப்பட்டு அமைச்சராக நீடிப்பார் என்றால் இதுதான் திராவிட அரசின் மாடலா என கேட்க விரும்புகிறோம். உடனடியாக அமைச்சர் பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்காக தமாகவை பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தொய்வுள்ள இடத்தை அடையாளம் கண்டு அந்த இடங்களில் வலுப்படுத்தி கூட்டணிக்கு முக்கிய கட்சியாக செயல்பட உறுதி கொண்டு அடுத்த 6 மாதங்களுக்குச் செயல்பட இருக்கிறோம்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...