Published : 13 Apr 2025 05:32 PM
Last Updated : 13 Apr 2025 05:32 PM

'வசந்தம் பெருகட்டும்': தமிழக தலைவர்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

சென்னை: தமிழகத்தில் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை தமிழ்ப் புத்தாண்டு கொண்டப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி: தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில், "எனதருமை தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங் காலமாய்க் கொண்டாடி மகிழ்கின்றார்கள். புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்!

மலர இருக்கும் `விசுவாவசு’ ஆண்டில், மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி நிறையட்டும்; எண்ணங்கள் ஈடேறட்டும்; முயற்சிகள் முளைக்கட்டும்; வெற்றிகள் பதியட்டும்; புன்னகை பூக்கட்டும்; மன நிறைவை வழங்கும் மங்கள ஆண்டாக அமையட்டும் என மனதார வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன்: ஈடில்லாப் பெருமைமிக்க, இனிய தொன்மை மிக்க, நீட்சிமிகு வரலாற்றைக் கொண்ட மாட்சிமிகு தமிழ் பெருமக்கள், சித்திரை திங்களின் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாகப் பன்னெடுங்காலமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். 2025 ஆம் ஆண்டு மலரும் இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டை உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில், நம் தமிழ் மக்களுக்கு உளம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களுக்கு வாழ்வில் புதிய எழுச்சியையும் மகிழ்ச்சியையும் மாநில வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக இப்புத்தாண்டு மலரட்டும். நம்பிக்கைதான் வாழ்க்கை வரும் 2006ல் தமிழகத்தில் புதிய ஆட்சி மலரப் போகிறது. இனி வரும் நம் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சியில் அனைத்து மதத்தின் பண்டிகைகளுக்கும், அரசின் ஆதரவும் வாழ்த்தும் இருக்கும்.

கு. செல்வப்பெருந்தகை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். நமது கொண்டாட்டத்தில் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மொழியியல் ஆகியவை தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதை தலைமுறை தலைமுறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வந்தாலும், தமிழகத்தில் நடைபெறும் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி மூலம் மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். மத்திய பா.ஜ.க. அரசால் தமிழர்களின் உரிமைகளும், தன்மானமும் பறிக்கப்பட்டு வருவதை மீட்டெடுக்கவும், தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையிலும் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இந்த விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு அனைவரது வாழ்வும் ஏற்றம் பெற உதவ வேண்டும். அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்: தமிழ் புத்தாண்டு சித்திரை 1, இச்சித்திரையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவும்,வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளிகூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கட்டும். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புமணி ராமதாஸ்: "இந்திர விழாவை நமக்குக் கொண்டு வரும் சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெயிலைக் கொடுக்கும் சித்திரை தான் இனி வரும் ஆண்டுகளில் நமக்கு வெற்றிகளையும் வழங்கப் போகிறது. சித்திரை வெற்றிகளையே வழங்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கையும் கூட. தமிழர்களின் வாழ்வில் வரப்போகும் பல நன்மைகளின் தொடக்கமாக சித்திரை மாதம் திகழ்கிறது.

சித்திரை மாதத்தின் தொடக்கமான இந்த நாள் தமிழர்களின் வாழ்வில் அமைதி, வளம், முன்னேற்றம், மனநிறைவு, வெற்றி, மகிழ்ச்சி, நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்து நன்மைகளும் நிறைவதன் தொடக்கமாக அமைய வேண்டும். தமிழர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் நன்மைகள் கிடைக்க சித்திரைத் திருநாள் வகை செய்ய வேண்டும் என்று கூறி சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்து கூறுகிறேன்" என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன்: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "உலகெங்கும் வாழும் தமிழர்கள் சித்திரை மாதம் முதல்நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். சித்திரை மாதம் வசந்தகாலத்தின் தொடக்கமாக அமைகிறது. ஆகவே அனைவருக்கும் இந்தத் தமிழ் புத்தாண்டு வசந்தகாலமாக அமையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

சு. திருநாவுக்கரசர்: சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி, ஸ்ரீவிசுவாவசு ஆண்டு பிறப்பதை முன்னிட்டு உலகம் முழுவதும் வாழும் இனிய தமிழ்ப்பெரு மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பெரு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்புத்தாண்டில் உலகெங்கும் வாழும் நம் தமிழ் மக்கள் அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிடவும் தமிழ்நாடும், தமிழ் மக்களும், அனைத்து நற்செல்வங்களும் பெற்று வாழ்வில் உயர்ந்து சிறந்திடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை அனைவருக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி என்னும் பழமையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் மாற்றத்திற்கான புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகள் உருவாகி, தமிழகத்தை அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் அழைத்துச் செல்ல இந்த இனிய திருநாளில் உறுதியேற்போம்.

இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பு மேலோங்கி அமைதி நிலவட்டும், இன்பமும், இனிமையும் இல்லந்தோறும் பொங்கட்டும்" என்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வைகோ: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், " இளவேனில் காலத்தின் தொடக்கமாக மலரும் பொன்னாள். சுட்டெரிக்கும் கோடை வெம்மையைத் தந்து, இயற்கையின் ஆடைகளாம் இலைகளை உதிரச் செய்து, கூம்பி நிற்கும் மரங்களையும் காட்டி. பின்னர் மெல்ல மெல்ல அவை தளிர்த்து, இலைகளையும், மொட்டுக்களையும், பூக்களையும், காய்களையும், கனிகளையும் தந்து, இயற்கைத் தாய் நம்மைக் களிப்படையச் செய்யும் காலம். மலரும் சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்: "சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் இருள் விலகி அவர்களின் உள்ளத்திலும், எண்ணத்திலும் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும் விதைப்பதோடு, ஒட்டுமொத்த தமிழக மக்களும் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஆண்டாகவும் இத்தமிழ்ப் புத்தாண்டு அமையட்டும்" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x