Published : 13 Apr 2025 02:59 PM
Last Updated : 13 Apr 2025 02:59 PM

சுவரொட்டி விவகாரம் - காங்கிரஸ் மாநில செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்

சென்னை: 2026ன் துணை முதல்வரே என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையைக் குறிப்பிட்டு சுவரொட்டி ஒட்டிய விவகாரம் தொடர்பாக மாநில செயலாளர் ஏ.வி.எம். ஷெரிப்-புக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செல்வப்பெருந்தகை அனுப்பியுள்ள நோட்டீசில், "தமிழ்நாடு காங்கிராஸ் கமிட்டியின் மாநில செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஏ.வி.எம். ஷெரிப் ஆகிய தங்கள் பெயர் தாங்கிய ஒரு சுவரொட்டி எனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாநகரில் சில இடங்களில் இன்று (13.04.2025) ஒட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இண்டியா கூட்டணியை சீர்குலைக்கும் முயற்சியில் பல்வேறு மதவாத தீய சக்திகள் கருமேகக் கூட்டம்போல் சூழ்ந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்த மதவாத தீய சக்திகள் கூடுதலாக நமது ஒற்றுமையை குலைக்க பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருகிறது.

இந்த சூழ்நிலையில், ஒற்றுமையாக இருக்கும் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடும், ஒற்றுமையை கெடுக்கின்ற வகையிலும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் தங்களுடைய வாசகங்கள் இடம்பெற்றுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

கூட்டணி பற்றி பேசுவதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே அனைத்து அதிகாரமும் உள்ளது. உங்களுடைய இந்த அநாகரிகமான செயல் கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறியதோடு ஒரு ஒழுங்கினமான செயலாகும்.

நான் ஏற்கனவே அறிவித்துள்ளபடி, நமது மூத்த தலைவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 7 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று என்னை சந்தித்தவர்களிடம் நான் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளேன்.

எனது பிறந்தநாளை முன்னிட்டு தங்களுடைய இந்த சுவரொட்டி விளம்பர செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதோடு, ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்பட்டதாகும்.

உங்களுடைய இந்த செயலுக்கு தகுந்த விளக்கத்தை 15 தினங்களுக்குள் எழுத்துபூர்வமாக நேரில் வந்து விளக்க வேண்டும்.

தாங்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையுடன் கலந்துபேசி உங்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x