Published : 13 Apr 2025 07:07 AM
Last Updated : 13 Apr 2025 07:07 AM

அண்ணாமலை புயல்; நான் தென்றல்: பாஜக தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் கருத்து

சென்னை வானகரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தேசிய தேர்தல் பொறுப்பாளர் தருண்சுக் அறிவித்தார். உடன் மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி, முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள்.

சென்னை வானகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக பாஜகவில் உட்கட்சித் தேர்தல் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நேற்று முன்தினம் விருப்பமனு தாக்கல் நடைபெற்றது. அப்போது தமிழக பாஜக தலைவர் பதவிக்கு அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் விருப்பமனு வழங்கினார். வேறு யாரும் மனு அளிக்காததால் போட்டியின்றி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு நயினார் நாகேந்திரனுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், நயினார் நாகேந்திரனின் கையை பிடித்து மேடைக்கு அழைத்து வந்தார். பின்னர் கட்சிக் கொடியை நயினார் நாகேந்திரன் ஏற்றினார். முன்னாள் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வழங்கினர்.

பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கட்சி துண்டை அணிவித்து திருப்பதி பெருமாள் கோயில் லட்டு பிரசாதத்தை வழங்கினார். பின்னர், நயினார் நாகேந்திரன் அனைவரையும் வணங்கிவிட்டு, அண்ணாமலையை கட்டி அணைத்தார். பின்னர் அவருக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து, தேசிய பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை கிஷன் ரெட்டி வெளியிட்டார். அதில், முன்னாள் தலைவர்கள் எல்.முருகன், அண்ணாமலை, தமிழிசை, நிர்வாகிகள் திருப்பதி நாராயணன், ஹெச்.ராஜா, கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா, சரத்குமார், பொன்.ராதாகிருஷ்ணன், கராத்தே தியாகராஜன், வினோஜ் பி.செல்வம், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

நிகழ்வில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ, முன்னாள் தலைவர்கள் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி, நிர்வாகிகள் நாராயணன் திருப்பதி, வி.பி.துரை சாமி, கே.பி.ராமலிங்கம், கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், விஜயதரணி, நமீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிறைவாக நயினார் நாகேந்திரன் பேசியதாவது: உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி பாஜக. அந்த கட்சி கொடி தமிழகம் எல்லாம் பறக்க வேண்டும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களையும், 250-க்கும் மேற்பட்ட எம்பிக்களையும் கொண்ட மிகப்பெரிய கட்சி பாஜக. என் மீது நம்பிக்கை வைத்து தலைமை தொண்டனாக தேர்ந்தெடுத்தற்கு நன்றிகள்.

முந்தைய தலைவர்கள் கோபுரம்போல ஒவ்வொருவரும் கட்சியை வளர்த்தனர். 'என் மண் என் மக்கள்' யாத்திரை மூலமாக தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் நடந்தே சென்று கோபுரத்தை கட்டி அதன் மேலே எல்லா கலசங்களையும் வைத்துள்ளார் அண்ணாமலை. இப்போது நமக்கு வேலை கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது மட்டும்தான். அந்த கும்பாபிஷேகத்தை அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும், சட்டப்பேரவை தேர்தலில் நடத்தப் போகிறோம். அப்போது கும்பாபிஷேகம் நடைபெறப்போகிறதா அல்லது திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நடைபெறப் போகிறதா நாடு ஆள்வோர் காடு ஆளப்போகிறார்களா என்பதை எல்லாம் இறைவன்தான் முடிவு செய்ய வேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னதை போல 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். முன்பு 4 எம்.பி. வென்றோம், வரும் தேர்தல்களில் 40 சீட்டுகளையும் வெல்வோம். அண்ணாமலையின் பாணி வேறு. எனது பாணி வேறு. அவர் புயல். நான் தென்றலாகத்தான் இருக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஓராண்டு காலத்துக்குள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வருவதே என் முன் இருக்கும் சவால். டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கின்றனர்’’ என்றார்.

தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை தேர்வு: தேசிய பொதுக்​குழு உறுப்​பின​ராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​ட​வர்​களின் பட்​டியலை கிஷன் ரெட்டி வெளி​யிட்​டார். அதில், முன்​னாள் தலை​வர்​கள் எல்​.​முரு​கன், அண்​ணா​மலை, தமிழிசை, நிர்​வாகி​கள் நாராயணன் திருப்​பதி, ஹெச்​.​ராஜா, கரு.​நாக​ராஜன், சசிகலா புஷ்​பா, சரத்​கு​மார், பொன்​.​ரா​தாகிருஷ்ணன், கராத்தே தியாக​ராஜன், வினோஜ் பி.செல்​வம், வி.பி.துரை​சாமி உள்​ளிட்​டோர் பெயர்​கள் இடம்​பெற்​றிருந்​தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x