Published : 13 Apr 2025 12:39 AM
Last Updated : 13 Apr 2025 12:39 AM

அதிமுக - பாஜக கூட்டணியால் பீதியின் உச்சத்தில் முதல்வர் ஸ்டாலின்: இபிஎஸ் விமர்சனம்

அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பீதியின் உச்சத்தில் உள்ளார் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியான நிலையில், இந்த கூட்டணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியிருப்பதாவது:

திமுக தலைவரும் திமுக அரசின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஒருமுறை திமுக பொதுக்குழுவில் பேசும்போது, 'தினமும் என்ன பிரச்சினை வரப்போகிறதோ என்று தான் தூக்கம் தொலைந்துவிட்டதாக' குறிப்பிட்டார். நேற்று முன்தினம் அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தைக் கெடுத்தது. இன்றோ அதிமுகவின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது போலும். பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

திமுக செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எனது எக்ஸ் தளப்பதிவு வாயிலாக தெரிவித்தேன். தமிழக நலனுக்காக ‘குறைந்த பட்ச செயல் திட்டம்’ இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெரிவித்திருந்தார்.

அது என்னவாக இருக்கும் என்று இரவு முழுக்க தூக்கத்தைத் தொலைத்த ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார். மணிப்பூர் மாநில பிரச்சினைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

நீட் என்றால் என்ன? அதனை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியது யார்? இதனை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு பிறகு நீட் பற்றி பேசுங்கள். மு.க.ஸ்டாலின் அவர்களே நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது. அதிமுக ஒருபோதும் தமிழகத்தை, நம் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காது. மாறாக நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத்தரவே செய்யும்.

காவிரி உரிமையை பெங்களூருவிலும், முல்லைப்பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த திமுக தலைவர் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். தமிழக விரோத திமுகவின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவுடன் அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாகை சூடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பின்குறிப்பு என குறிப்பிட்டு, ‘‘ரெய்டுகளுக்குப் பயந்து ‘தொட்டுப்பார்- சீண்டிப்பார்’ வீடியோ கூட வெளியிட முடியாத அளவுக்கு தொடை நடுங்கி கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்’’ என தெரிவித்துள்ளார்.

இதுதவிர, திமுகவின் துரோக கத்திகள் என்ற தலைப்பிலான கருத்து சித்திரத்தில், தமிழக வரைபடத்தின் அருகில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிற்பது போன்றும், தமிழகத்தின் மீது நீட், கச்சத்தீவு, ஈழத்தமிழர் படுகொலை, பாலியல் வன்கொடுமை, கல்விக்கடன், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, காவிரி உரிமை, பழைய ஓய்வூதிய திட்டம் என்ற கத்திகள் குத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x