Published : 12 Apr 2025 09:23 PM
Last Updated : 12 Apr 2025 09:23 PM
கோவை: தமிழகத்தில் பள்ளிக்கல்வி, உயர் கல்வியை தமிழ் வழியில் படித்து தமிழில் தேர்வெழுதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1, குரூப்-2 தேர்வுகளில் கடுமையான வினாத்தாள், மதிப்பீடு முறையால் மதிப்பெண்ணை இழந்து அரசு பணி கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், கடந்த 2010-ல் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து, 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிக்கல்வி, உயர் கல்வியில் பட்டப்படிப்பை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் சட்ட மசோதா கடந்த 2020-ல் நிறைவேற்றப்பட்டது. பள்ளிக்கல்வி, கல்லூரி கல்வியை தமிழ் வழியில் படித்து தமிழில் தேர்வெழுதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1, குரூப்-2 தேர்வுகளில் திறன் இருந்தும் அரசு பணி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வெழுதும் மாணவர்கள் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2 ஆகிய இரு முக்கிய தேர்வுகளிலும் முதல்நிலை தேர்வை தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் கொள்குறி வகை விடைகளை எழுதி விடலாம். அடுத்தகட்டமாக குரூப் 1 முதன்மை தேர்வுகளில் Descriptive (விளக்கமாக) எழுத வேண்டி இருப்பதால் பள்ளி, கல்லூரி வரை தமிழ் வழியில் படித்தவர்கள் தமிழில் தேர்வெழுதி வருகின்றனர்.
குரூப் 2 முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்வுகளில் தமிழ் அல்லாமல் ஆங்கிலம் தேர்வு செய்பவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழ் விருப்பமாக எழுதுபவர்கள் கடுமையான கேள்விகளை சந்திக்கும் போது மதிப்பெண் குறைந்து தோல்வி அடைகின்றனர். ஆங்கிலம் படித்த ஆசிரியர்கள் திருத்துவதால் தமிழில் போதிய மதிப்பெண்களை வழங்குவதில்லை.
பள்ளி, கல்லூரியில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் ஆங்கிலத்தில் தேர்வெழுதி 20 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவது சட்டத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2 தேர்வை முதல்நிலை, முதன்மை தேர்வுகளை தமிழ் வழியில் 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகை கோருபவர்கள் பள்ளி, கல்லூரி கல்வி படிப்பு முதல் குரூப்-1, குரூப்-2 முதன்மை தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்து கிராமப்புற தமிழ் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
குறிப்பாக 100 இடங்களை நிரப்பும்போது அதில் 20 சதவீத இடங்களை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் எழுதியவர்களுக்காக வழங்கிட வேண்டும். தமிழ் வழியில் தேர்வெழுதிய 5 சதவீதம் பேர் கூட வெற்றி பெற்று பணியில் சேர வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.
2010 முதல் 2023 வரை நடந்த குரூப்-1 தேர்வுகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான முன்னுரிமை அடிப்படையில எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு டிஎன்பிஎஸ்சி எந்தவித தகவலையும் தரவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...