Published : 12 Apr 2025 07:27 PM
Last Updated : 12 Apr 2025 07:27 PM
திருநெல்வேலி: பெண்கள் மீது அருவருக்கத்தக்க சிந்தனை கொண்ட அமைச்சர் பொன்முடி போன்ற நபர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று நாம் தமிழர் கட்சியிலிருந்து அண்மையில் விலகிய காளியம்மாள் தெரிவித்தார்.
ஆட்சித்தமிழ் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், தேசிய சாலைகளை சுங்க சாவடிகளற்ற சாலைகளாக மாற்ற வேண்டும், முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி சார்பில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சி தலைவர் அ. வியனரசு தலைமை வகித்தார். அண்மையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளரான பி.காளியம்மாள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கட்சியின் மகளிர் பாசறை பொறுப்பாளர் தமிழ்மதி முன்னிலை வகித்தார்.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் தலைவர் மா.மாரியப்ப பாண்டியன், தமிழர் நீதிக் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ் பாண்டியன், தமிழர் கூட்டமைப்பு நிர்வாகி அ.பீட்டர், ஆட்சித் தமிழ் புரட்சிக் கொற்றம் செயலாளர் கு.சேரன்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய காளியம்மாள், "கச்சத்தீவை மீட்பது தொடர்பான எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் எந்த அரசியல் கட்சியும் அரசும் எடுக்கவில்லை. தேர்தல் நேர வியூகமாகவே கச்சத்தீவு பயன்படுத்தப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெற்று இருந்தபோது கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யவில்லை. பாஜக அரசும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மகளிர் உரிமைத்தொகை என்று மாதம் ஆயிரத்தை கொடுத்துவிட்டு மதுபான கடைகள் மூலம் மாதம் ரூ. 15 ஆயிரத்தை ஒவ்வொரு வீட்டு பெண்களிடம் இருந்தும் அரசு பறித்துக்கொள்கிறது. மதுபான ஆலைகளை நடத்திக்கொண்டு மதுபான கூடங்களை மூடப்போவதாக நாடகம் நடத்தி கொண்டிருக்கின்றனர்.
அரசியல் பாகுபாடின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழகத்திற்கு தரவேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் அரசியல் கணிக்க முடியாத ஒன்று. எப்போது யாருடன் கூட்டணியில் இருக்கிறார்கள், எப்போது யாரிடமிருந்து வெளியே வருவார்கள் என்பதை தேர்தல் வரை காத்துக் கொண்டேதான் இருக்க வேண்டும்.
இப்போது கூட்டணி என சொல்லலாம் பிறகு மறுக்கலாம் எதனையும் ஊர்ஜிதமாக சொல்ல முடியாது. எனது அடுத்த கட்ட முடிவு விரைவில் அறிவிக்கப்படும். பெண்கள் மீது அருவருக்கத்தக்க சிந்தனை கொண்ட அமைச்சரை போன்ற ஆட்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...