Published : 12 Apr 2025 06:40 PM
Last Updated : 12 Apr 2025 06:40 PM

''தலையாட்டி பொம்மையாய் இருந்து கூட்டணியை உறுதி செய்துள்ளார் பழனிசாமி'': அமைச்சர் ரகுபதி

சென்னை: தமிழ்நாட்டு நலனுக்கான எந்தவித உறுதியையும் பாஜகவிடம் கேட்காமல் அடிமை சாசனம் எழுதி கொடுப்பது போல கூட்டணிக்கு சரி என தலையாட்டி பொம்மையாய் பேச்சின்றி தலையை மட்டும் ஆட்டி கூட்டணியை உறுதி செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இரண்டு ரைடுகளுக்கு அரண்டு போய் அமித் ஷா முன்னிலையில் ஒருவார்த்தை கூட பேசாமல் தலையாட்டி பொம்மை போல அமர்ந்து கூட்டணியை உறுதி செய்த பழனிசாமியின் யோக்கியதையை முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டிவிட்டார் என்றவுடன் ரோஷம் வாந்தவரைப் போல வீண் அவதூறுகளை மட்டும் அள்ளிவிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பழனிசாமி.

பாரபட்சமான ஜிஎஸ்டி வரிப் பகிர்வை ஏற்றுக்கொண்டு பொருளாதார உரிமையை விட்டுக்கொடுத்தது, உதய் மின்திட்டத்தில் கையெழுத்திட்டு மின்கட்டண நிர்ணய உரிமையை விட்டுகொடுத்தது, சிஏஏ வை ஆதரித்து முஸ்லீம் மக்களின் முதுகில் குத்தியது இப்படி தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய பாஜகவிடம் விட்டுக்கொடுத்தது அடிமை அதிமுக ஆட்சியில் தான்.

அதோடு அடிமை அதிமுக ஆட்சியில் தான் நீட் நுழைவு தேர்வு தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டது என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பாஜக கூட்டணியில் ஒட்டிக்கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தவர் பழனிசாமி. சரி இப்போதாவது அதற்கு பிராயச்சித்தம் செய்யும் வகையில் நீட் விலக்களித்தால் கூட்டணி வைக்கிறேன் என்றாவது பாஜக அரசிடம் வலியுறுத்தினாரா அதுவும் இல்லை. எந்த வித நிபந்தனையும் பழனிசாமி விதிக்கவில்லை என்று அமித்ஷா போட்டுடைத்துவிட்டார்.

இப்படி தமிழ்நாட்டு நலனுக்கான எந்தவித உறுதியையும் பாஜகவிடம் கேட்காமல் அடிமை சாசனம் எழுதி கொடுப்பது போல கூட்டணிக்கு சரி என தலையாட்டி பொம்மையாய் பேச்சின்றி தலையை மட்டும் ஆட்டி கூட்டணியை உறுதி செய்துள்ளார் பழனிசாமி. இதை முதல்வர் ஸ்டாலின் சுட்டிக் காட்டி தமிழ்நாட்டை அடமானம் வைக்க துடிக்கிறார்கள் என்று கூறியதில் என்ன தவறு.

ஏதோ "குறைந்த பட்ச செயல்திட்டம்" உள்ளது என்கிறார். அந்த ரகசியத்தை எப்போது சொல்வார்கள் தேர்தல் முடிந்த பின்னா..? அந்த செயல்திட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த செயல்திட்டம் உள்ளதா..? நீட் தேர்வு விலக்கு, மும்மொழி என்ற இந்தி திணிப்பு, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை, நிதி பகிர்வில் பாரபட்சம் இப்படியான ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகத்திற்கு என்ன செயல் திட்டத்தை மேற்கொள்ள போகிறார் பழனிசாமி என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல துப்பில்லை.

"சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வருவதற்கு" மக்கள் நலனைப் பற்றி பழனிசாமி சிந்தித்தால் தானே அதை பற்றி செயல்திட்டம் வகுக்க.. உங்களது அந்த செயல்திட்டம் எல்லாம் இனி அமலாக்கத்துறை அதிமுக வினர் வீட்டுக்கதவை தட்டக் கூடாது என்பதுதான் என தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். துரோகி அதிமுகவும், விரோதி பாஜகவும் சேர்ந்த கூட்டணியை வரும் தேர்தலில் விரட்டி அடிப்பார்கள் தமிழ்நாட்டு மக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x