Last Updated : 12 Apr, 2025 05:30 AM

2  

Published : 12 Apr 2025 05:30 AM
Last Updated : 12 Apr 2025 05:30 AM

அரசியலில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: தமிழக பாஜக தலைவராக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், அரசியலில் அவர் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள தண்டையார் குளம் என்ற இடத்தை பூர்வீகமாகக் கொண்டவர் நயினார் நாகேந்திரன் (64). முதுகலைப் பட்டம் பெற்றவர். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.

1989-ல் அதிமுகவில் இணைந்த நயினார் நாகேந்திரன், அதிமுக பணகுடி நகரச் செயலாளர், இளைஞரணி செயலாளர், நெல்லை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளர், தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்தவர்.

2001-ல் நெல்லை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் தொழில் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2006-ல் மீண்டும் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

2011-ல் திருநெல்வேலி தொகுதியில் வெற்றிபெற்றார். ஆனால், மீண்டும் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. 2016-ல் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை விட்டு விலகி, 2017-ல் பாஜகவில் இணைந்தார்.

அவருக்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2019-ல் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2021-ல் நெல்லை சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு ஆதரவு கேட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் செய்திருந்தார். இந்த தேர்தலில் நயினார் நாகேந்திரன் வெற்றிபெற்று, தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நெல்லை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக தற்போது நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் அவருக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக நயினார் நாகேந்திரன் திகழ்ந்தார். பாஜகவில் இருந்தாலும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தனது குரு என்று எப்போதும் சொல்லக்கூடியவர்.

நெல்லை தொகுதி தேர்தல் களத்தில் மட்டுமின்றி, அரசியலிலும் ஏற்ற இறக்கங்களை நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார். தற்போது பாஜகவில் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு அவர் உயர்ந்துள்ளது, அவரது ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x