Published : 09 Apr 2025 07:27 AM
Last Updated : 09 Apr 2025 07:27 AM
சென்னை: தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவற்றை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்த கருத்து:
மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்: இதில் புதிய விஷயம் ஒன்றும் இல்லை. அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறதோ அதைத்தான் உச்ச நீதிமன்றமும் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால், இந்த தீர்ப்பு தமிழக ஆளுநர் மட்டுமின்றி மற்ற மாநில ஆளுநர்களுக்கும் ஒரு கடிவாளம் போட்டுள்ளது. கூடிய விரைவில்’ என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு ஆளுநர்கள் இனி நாள் கணக்கில் கோப்புகளையும், மசோதாக்களையும் கிடப்பில் போட முடியாது.
ஏற்கெனவே சட்டப்பிரிவு 356 என்ற ஆட்சி கலைப்புக்கான ஆயுதத்தை ஆளுநர்கள் தங்களது இஷ்டம்போல பயன்படுத்த முடியாது என்பதையும் உச்ச நீதிமன்றம்தான் தெளிவுபடுத்தியது. தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது என்பதையும், ஆளுநர்களுக்கு ஏதேச்சையான அதிகாரம் இல்லை என்பதையும் இந்த தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது.
ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்திருப்பது வரவேற்புக்குரியது. அரசியல் ரீதியாகவும், மக்களின் நலன் சார்ந்தும் சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு இனி எந்த தடையும் இருக்காது.
மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன்: அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் குறித்த சந்தேகங்கள் எழும்போது, அது தொடர்பாக வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் 2 நீதிபதிகள் மட்டுமே விசாரித்துள்ளனர். இதுவே தவறானது. உச்ச நீதிமன்றம் என்றாலும், ஆளுநர் என்றாலும், மத்திய, மாநில அரசுகள் என்றாலும் அவரவருக்கு என்னென்ன அதிகாரம் உள்ளதோ அந்த அதிகார வரம்பை மீறியோ, தாண்டியோ செயல்படக்கூடாது. உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு என்றாலும் எதேச்சையான அதிகாரத்துடன் உச்ச நீதிமன்றம் செயல்பட முடியாது. அப்படி மீறி செயல்பட்டால் அது ஆபத்தில்தான் முடியும்.
இந்த வழக்கை பொறுத்தமட்டில் ஆளுநரின் செயல்பாடுகளி்ல் தவறு இருக்கிறது என சுட்டிக்காட்ட உச்ச நீதிமன்றத்துக்கு எந்த தடையும் கிடையாது. ஆனால், அதேநேரம் ஆளுநருக்குரிய அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு நாங்களே உத்தரவு பிறப்பிக்கிறோம் என உச்ச நீதிமன்றம் கூறுவதுதான் தவறு. அரசியலமைப்பு சட்டத்திலும் அதற்கு இடம் கிடையாது.
ஜனநாயகத்துக்கு விரோதமாகவோ அல்லது பொதுமக்களின் நலனுக்கு எதிராகவோ மாநில அரசு சட்டம் இயற்றுகிறது என்றால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளி்த்துதான் தீர வேண்டுமா? பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு திறமையான, தகுதியான நபர்களை கண்டறிந்து அரசியல் சாயம் இல்லாமல் கல்வியாளர்களை பதவியில் அமர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கில்தான் ஆளுநர்களே வேந்தர்களாக பதவியில் உள்ளனர். அதுவும் தவறு என்றால் இந்த தீர்ப்பை எப்படி உற்றுநோக்குவது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...