Published : 08 Apr 2025 06:55 PM
Last Updated : 08 Apr 2025 06:55 PM
சென்னை: “முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாகக் கூறி, பிற மதத்தவருக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் பாஜகவினரே பரப்புகின்றனர். இந்து, கிறிஸ்தவர்களின் சொத்து குறைவாக இருக்கிறது என்பதற்கு ஏதாவது புள்ளி விவரம் இருக்கிறதா? இந்துகளை இந்துக்களாக உணர வைக்க முடியாததால் சிறுபான்மையினருக்கு எதிராக திசை திருப்புகின்றனர்,” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசியது: “வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேறும்போது அனைவருக்கும் எதிர் கருத்து கூற வாய்ப்பளிக்கப்பட்டது. நள்ளிரவு வரை பேச அனுமதி வழங்கப்பட்டது. மேலோட்டமாக பார்த்தால் அனைத்தும் ஜனநாயக முறையில் நடந்தேறியதுபோல தெரியும். எனினும், பாஜகவிடம் உள்ள பெரும்பான்மையை வைத்துக்கொண்டு, சட்டத்தை நிறைவேற்றி ஜனநாயகத்தின் பெயரால் ஜனநாயகத்தை படுகொலை செய்தனர். இதுதான் நவீன பாசிசம்.
முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாகக் கூறி, பிற மதத்தவருக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் பாஜகவினரே பரப்புகின்றனர். இந்து, கிறிஸ்தவர்களின் சொத்து குறைவாக இருக்கிறது என்பதற்கு ஏதாவது புள்ளி விவரம் இருக்கிறதா? இந்துகளை இந்துக்களாக உணர வைக்க முடியாததால் சிறுபான்மையினருக்கு எதிராக திசை திருப்புகின்றனர். 30ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருப்போம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகிறார். அதன்பிறகு எங்கள் வாரிசுகள் வந்து அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை தூக்கி எறிவார்கள்.
திமுகவை வீழ்த்திவிட்டால் திராவிடத்தை வீழ்த்தலாம் என்ற அவர்களது கனவு விசிக இருக்கும் வரை பலிக்காது. கூட்டணியில் எத்தனை சீட் வாங்குகிறோம் என்பது முக்கியமல்ல சட்டப்பேரவையில் எங்கள் சார்பில் ஒற்றை குரல் ஒலித்தாலும் அது எங்கள் கொள்கைக் குரலாக ஒலிக்கும்,” என்று அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், விசிக எம்எல்ஏக்கள் ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...