Published : 08 Apr 2025 06:52 AM
Last Updated : 08 Apr 2025 06:52 AM

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு - இன்று அமலுக்கு வருகிறது

சென்னை: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று அமலுக்கு வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயம் செய்கின்றன.

கடந்த 2024 மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. இதனால், சிலிண்டர் விலை ரூ.918-ல் இருந்து ரூ.818 ஆக குறைந்தது. கடந்த ஓராண்டில் வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையிலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு நேற்று உயர்த்தியுள்ளது. இதன்படி, ரூ.818.50-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.868.50 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, உஜ்வாலா திட்டத்தின்கீழ், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ரூ.550 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார். விலை உயர்வு இன்று அமலுக்கு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்: சிலிண்டர் விலை உயர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘சிலிண்டர் விலை உயர்வு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் என கெஞ்சும் நிலைக்கு மக்களை தள்ளிவிட்டனர். தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திருக்காமல் விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x