Published : 08 Apr 2025 02:38 AM
Last Updated : 08 Apr 2025 02:38 AM
சென்னை: டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்தில் நடத்த கூறவில்லை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கவே கோரினோம் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, டாஸ்மாக் வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: டாஸ்மாக் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் எல்லா வழக்குகளையும் சேர்த்து ஒன்றாக விசாரியுங்கள் என்றுதான் நாங்கள் கேட்டிருக்கிறோமே தவிர, வேறு மாநிலத்துக்குச் சென்று எங்களுடைய வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை.
டாஸ்மாக்கில் திடீர் சோதனை நடந்தது. ஆனால், என்ன தொகை, எவ்வளவு என்பதை அவர்கள் வெளியிடவில்லை. பாஜக தலைவர் ஆயிரம் கோடி என்றார்.அதைத்தொடர்ந்தே அமலாக்கத்துறை தெரிவித்தது. அதையேதான், பழனிசாமியும் கூறினார்.
நிச்சயமாக எங்கள் ஆட்சியில் டாஸ்மாக்கில் எந்த முறைகேடும் இல்லை. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தான் நாங்கள் அங்கே முன் வைத்தோம். நீதிமன்றத்தில் உள்ள வழக்கு பற்றி பேரவையில் பேசக்கூடாது.
சில தினங்கள் முன் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை சென்று அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நம்முடைய மீனவர்களைப் பற்றியோ கச்சத்தீவை பற்றியோ பேசவில்லை. வழக்கு நடத்தி, தண்டனை அனுபவித்த பின்னரே படகுகளை மீட்டு மீனவர்களே திரும்பியுள்ளனர்.
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் நடைபெறும் சோதனையை பொருத்தவரை, அமலாக்கத் துறை அதிமுகவைப்போல் பாஜகவின் அரசியல் முத்திரை குத்தப்படாத ஒரு கூட்டணி கட்சியாகத்தான் பார்க்கிறோம். இவ்வாறு அவர் பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...