Published : 07 Apr 2025 10:18 PM
Last Updated : 07 Apr 2025 10:18 PM
மாமல்லபுரம் - முகையூர் இடையேயான நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு 75 சதவித பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், முகையூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழிப்பாதையாக விரிவுபடுத்த மத்திய அரசு ரூ.24,435 கோடி நிதி ஒதுக்கியது. மேலும், நான்கு வழிப்பாதைக்கான பணிகள் 8 பிரிவுகளாக மேற்கொள்ளப்பட உள்ளது. முதற்கட்டமாக, மாமல்லபுரம் - முகையூர் பகுதிக்கு ரூ.707 கோடி. முகையூர் - மரக்காணம் பகுதிக்கு ரூ.792 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், மாமல்லபுரம் - முகையூர் பகுதி ஈசிஆர் சாலையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேசிய நெடுஞ்சாலைத்துறை தொடங்கி மேற்கொண்டு வருகிறது. இதற்காக, ஈசிஆர் சாலையிலிருந்த நான்கு சுங்கச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன.
மாமல்லபுரம் - முகையூர் இடையே 31 கி.மீ. தொலைவுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஓஎம்ஆர், ஈசிஆர் சாலைகள் இணையும் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஏற்கெனவே உள்ள தரைப்பாலகளை விரிவுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், சாலை விரிவாக்கத்துக்காக சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ள தாக தெரிகிறது. இப்பணிகள் 2025-ம் ஆண்டு மே மாத இறுதியில் நிறைவடையும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் 75 சதவீத பணிகள் நிறைவுபெற்றுள்ளன. எனினும், பூஞ்சேரி, கடும்பாடி, வீட்டிலாபுரம், காத்தான்கடை உள்ளிட்ட ஒருசில இடங்களில் உயர்மட்ட மேம்பால பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் சற்று தாமதமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் நிறைவு பெற உள்ளதால், முகையூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், புதிய நான்கு வழிச்சாலை வழியாக மாமல்லபுரம் - புதுச்சேரி செல்லும் வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சுற்றுப்புற கிராம மக்கள் கூறியதாவது: இத்தனை நாட்கள் உள்ளூர் மக்களாகிய நாங்கள் ஈசிஆர் சாலையில் சுங்க கட்டணமின்றி சென்று வந்தோம். தற்போது, சுங்கச்சாவடி அமைப்பதால் எங்களது வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என கூறுகின்றனர். சுங்கச்சாவடியை சுற்றியுள்ள எந்தெந்த கிராமங்களுக்கு சுங்கச்சாவடி கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை இப்போதே தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவிக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment