Published : 07 Apr 2025 07:01 AM
Last Updated : 07 Apr 2025 07:01 AM
ஊட்டி: ஊட்டியில் அதிநவீன வசதிகளுடன் ரூ.130 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். ரூ.727 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில், முதல்வர் ஸ்டாலின் ரூ.494.51 கோடி மதிப்பிலான 1,703 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். ரூ.130.35 கோடியிலான 56 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.102.17 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 15,634 பேருக்கு வழங்கினார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மத்திய அரசு வெளியிட்ட தகவலில், 9.69 சதவீத வளர்ச்சியுடன் நாட்டிலேயே அதிக வளர்ச்சி கண்ட மாநிலம் தமிழகம் என ‘இந்து’ நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதலிடம் மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் ‘பெஸ்ட்’ இதுதான். தமிழகம் மட்டும் ‘டாப் கியரில்’ போவதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடு முழுமைக்குமான சமூகநீதி, மாநில சுயாட்சி, கூட்டாட்சி, மத நல்லிணக்கம் ஆகிய உயர்ந்த கருத்தியல்களை வென்றெடுக்கவே நாங்கள் உழைக்கிறோம். அதனால்தான் மக்களவை, மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் நாட்டையே காப்பாற்றுவதாக உள்ளன. தமிழகத்தின் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்க சதி நடக்கிறது. தொகுதி மறுவரையறை என்ற பெயரில் மிகப்பெரிய சதி நடக்க உள்ளதை முதன்முதலில் உணர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மாநிலம் தமிழகம்.
பிரதமர் உறுதியளிக்க வேண்டும்: இந்த சதியை தடுக்கும் விதமாக, நாடு முழுமைக்குமான கூட்டு நடவடிக்கை குழு அமைத்து, அந்த குழு சார்பில் பிரதமரை சந்திக்க தேதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளோம். பிரதமர் நேரம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் தொகுதி சதவீதம் குறையாது என்ற உறுதிமொழியை தமிழக மண்ணில் நின்று பிரதமர் வழங்க வேண்டும். அதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும்.
புதுச்சேரியுடன் சேர்த்து 40 எம்.பி.க்கள் இருக்கும்போதே, தமிழகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் நசுக்குகின்றனர். இந்த எண்ணிக்கையும் குறைந்தால், தமிழகத்தையே நசுக்கி, ஒழித்துவிடுவார்கள். அனைத்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய திருத்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவையில் ஆ.ராசா, மாநிலங்களவையில் திருச்சி சிவா உணர்ச்சிப்பூர்வமாக பேசினர். அதேநேரம், மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை ஒரே ஒரு நிமிடம்தான் பேசினார். கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே ‘டக்-அவுட்’ ஆகும் பேட்ஸ்மேன்கூட இதைவிட அதிக நேரம் களத்தில் இருப்பார்.
அந்த ஒரு நிமிடத்திலும்கூட அதிமுக இதை எதிர்க்கிறதா, ஆதரிக்கிறதா என்று சொல்லவில்லை. ஆனால் நாங்கள், இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட அன்று காலையிலேயே சட்டப்பேரவையில் கருப்பு பட்டை அணிந்து வந்து எதிர்ப்பை பதிவு செய்தோம். வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பிலும் வழக்கு தொடருவோம். துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பெயரிலும் வழக்கு தொடரப்படும்.
தமிழக சட்டப்பேரவையி்ல் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை மத்திய பாஜக அரசு நிராகரித்துள்ளது. இதில் அடுத்தகட்ட சட்ட, அரசியல் நடவடிக்கைகளை தீர்மானிக்க வரும் 9-ம் தேதி அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளேன். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, நீட் தேர்வு அச்சத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு திமுகவை குற்றம்சாட்டி அறிக்கை விடுகிறார்.
பழனிசாமிக்கு சவால்: கூட்டணியில் இருந்தபோதும், கூட்டணியாக தேர்தலை சந்தித்தபோதும் நீட் விலக்கு வேண்டும் என்று நீங்கள் ஏன் பாஜகவிடம் நிபந்தனை விதிக்கவில்லை. மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், நீட் விலக்கு நிச்சயம் அமலுக்கு வந்திருக்கும்.
தமிழக மாணவர்கள் மேல் உங்களுக்கு துளியாவது அக்கறை இருந்தால், பாஜகவுடன் கூட்டணிக்கு போவதற்கு முன்னால், ‘நீட் விலக்கு தந்தால்தான் கூட்டணி’ என்று வெளிப்படையாக அறிவிக்க தயாரா? உருப்படியாக எதுவும் செய்யாமல், வெறுமனே பேசிக்கொண்டே இருப்பதால்தான், மக்களால் மீண்டும் மீண்டும் நீங்கள் புறக்கணிக்கப்படுகிறீர்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தொடர்ந்து, கூடலூரில் ஏழைகளுக்கு குடியிருப்பு, ஊட்டியில் பன்னடுக்கு வாகன நிறுத்தம், மினி டைடல் பார்க், புதிய பேருந்துகள் உட்பட நீலகிரி மாவட்டத்துக்கான 6 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.
ஊட்டியில் அனைத்து வசதிகளுடன் ரூ.130.35 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்வுகளில், பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, ஊட்டி எம்எல்ஏ ஆர்.கணேஷ், அரசுத் துறை செயலர்கள் செந்தில்குமார் (சுகாதாரம்), ஜெயகாந்தன் (பொதுப்பணி), நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, ‘இந்து’ என்.ராம், மருத்துவமனை டீன் கீதாஞ்சலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT