Published : 07 Apr 2025 03:27 AM
Last Updated : 07 Apr 2025 03:27 AM
மதுரை: மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், தேசிய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில், வக்பு வாரிய சட்டத் திருத்தம் மூலம் நாட்டில் பிளவுவாத அரசியலை கட்டமைக்கின்றனர் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுப் பொதுக் கூட்டம், மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புக் குழுச் செயலாளர் சு.வெங்கடேசன் எம்.பி. வரவேற்றார். மூத்த தலைவர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், கே. பாலகிருஷ்ணன், வாசுகி ஆகியோர் பேசினர்.
இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: திமுக அரசு கேரளாவோடு நெருக்கமான அரசாக உள்ளது. மத்திய பாஜக அரசு மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்காமல் கூட்டாட்சியை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த மாநாட்டில் மதச் சார்பின்மையை, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்நோக்கில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மாற்று அரசியலாக விஞ்ஞான சோஷலிசம் வளர்ந்து வருகிறது. மத்திய பாஜக அரசு மக்களைப் பிளவுபடுத்தும் அரசாக உள்ளது. வகுப்புவாதத்துக்கு எதிரான சக்திகள் ஒன்றிணைந்து, மக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
வக்பு வாரிய சட்டத் திருத்தம் மூலம் நாட்டில் பிளவுவாத அரசியலைக் கட்டமைக்கின்றனர். கேரளாவில் இரு சமூகத்தினரிடையே பிரிவினையை உண்டாக்கி வெறுப்பு அரசியலை ஏற்படுத்துகின்றனர். கேரளாவில் இடது முன்னணி அரசையும், தமிழகத்தில் திமுக அரசையும் பழிவாங்குகிறார்கள். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என திசை திருப்பும் முழக்கத்தை எழுப்பியுள்ளனர். மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்த வேண்டும்.
ரூ.15 லட்சம் கோடி கடன்... மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் வாழமுடியாத சூழல் உள்ளது. கேரளாவும், தமிழகமும் ஒருமித்த தன்மை கொண்டவையாக உள்ளன. இரு மாநில மக்களும் ஒரே தன்மையில் நெருக்கமாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொருளாளர் மதுக்கூர் ராமலிங்கம் நன்றி கூறினார். முன்னதாக மதுரை பாண்டி கோயில் அருகில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது.
தலைவர்கள் வாழ்த்து: இந்த மாநாட்டில் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.ஏ. பேபி (71) தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள பிரக்குளத்தைச் சேர்ந்த பேபி, மாணவப் பருவத்திலேயே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பணியாற்றியவர்.
1986 முதல் 1998 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். 2006 முதல் 2011 வரை கேரள அமைச்சரவையில் கல்வி, கலாச்சாரத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழகத்தைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன், உ. வாசுகி உட்பட 18 பேர் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த பாலபாரதி, குணசேகரன் உட்பட 85 பேர் மத்தியக் குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment