Published : 06 Apr 2025 04:53 PM
Last Updated : 06 Apr 2025 04:53 PM

‘தமிழகத்துக்கு மும்மடங்கு நிதி தந்தும் சிலர் அழுகின்றனர்’ - பிரதமர் மோடி விமர்சனம்

ராமேஸ்வரம்: “தமிழகத்துக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்த போதிலும் சிலர் நிதிக்காக
அழுகின்றனர்” என்று யாருடைய பெயரையும் வெளிப்படையாக குறிப்பிடாமல் பிரதமர் மோடி திமுகவை சூசகமாக விமர்சித்துள்ளார். மேலும், திமுக தலைவர்கள் தங்களின் கடிதங்களில் தமிழில் இல்லாமல், ஆங்கிலத்தில் கையெழுத்திட்டதையும் விமர்சித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் பாம்பன் - மண்டபம் இடையே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசும் போது, “கடந்த 2014ம் ஆண்டு முதல் மோடி அரசு தமிழகத்துக்கு நிதி அளித்து வருகிறது. இது கடந்த ஐக்கிய முற்போக்கு அரசு ஆட்சியை விட மூன்று மடங்கு அதிகம். அப்போது திமுக யுபிஏ அரசில் அங்கம் வகித்தது. தமிழகத்தின் ரயில்வே பட்ஜெட்டும் 7 மடங்கு அதிகரித்துள்ளது. சிலர் காரணம் இல்லாமல் அழுவதையே ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் அதைத் தொடர்ந்து செய்கின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.கள் அவர்களின் மொழிப் பெருமையைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் எனக்கு அவர்கள் கடிதம் எழுதும் போது அதில் ஆங்கிலத்திலேயே கையெழுத்திடுகின்றனர். ஏன் அதில் தமிழில் கையெழுத்திடுவதில்லை? அவர்களின் மொழிப் பெருமை அப்போது எங்கே போனது?

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பாக ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டது. அப்போது யுபிஏ கூட்டணியில் யார் முக்கியத் தலைவர்களாக இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இன்று ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள எனது ஏழை எளிய சகோதர, சகோதரிகள், மத்திய அரசின் உதவி மூலமான திட்டத்தின் கீழ் 12 லட்சம் பக்கா வீடுகளைப் பெற்றுள்ளனர். நாடுமுழுவதும் 12 கோடி குடும்பங்கள் தங்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். இதில், 1.1 கோடி குடும்பங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தின் எனது தாய்மார்களும், சகோதரிகளும் முதல் முறையாக இந்த வசதியைப் பெற்றுள்ளனர்.

மருத்துவப் படிப்புகளை தமிழில் தொடங்க வேண்டும் என்று நான் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதன் மூலம் ஏழைக் குடும்பத்து குழந்தைகளின் மருத்துவர் கனவு நிறைவேறும். நமது நாட்டுக் குழந்தைகள் மருத்துவப் படிப்புக்காக வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது என்பதை உறுதி செய்ய நாங்கள் முயற்சி மேற்கொள்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றுள்ளது.

மீனவர்களின் பாதுகாப்பும், நல்வாழ்வும் இந்த அரசின் முன்னுரிமையாக உள்ளது. இந்திய அரசின் அர்ப்பணிப்பு மிக்க முயற்சிகளால், கடந்த 10 ஆண்டுகளில் 3, 700 மீனவர்கள் இலங்கையில் இருந்து வெற்றிகரமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 600 அதிகமான மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். நமது மீனவர்களில் சில மரண தண்டனைக்கு ஆளாகியுள்ளார்கள். என்றாலும் பெரும்பாலான மீனவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம்.” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x