Published : 06 Apr 2025 12:58 PM
Last Updated : 06 Apr 2025 12:58 PM

வேளாண்துறையின் ஆண்டு வளர்ச்சி 0.15% ஆக வீழ்ச்சி: அரசுக்கு அன்புமணி கேள்வி

சென்னை: தமிழகத்தில் 2024 - 25 ஆம் ஆண்டில் வேளாண்துறையின் ஆண்டு வளர்ச்சி 0.15% ஆக வீழ்ச்சியந்துள்ளது.60 சதவீதம் மக்களின் பங்களிப்பு வெறும் 10 சதவீதம் தான் என்றால் விவசாயிகள் எவ்வாறு முன்னேற முடியும் என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் பொருளாதாரம் 2024 - 25 ஆம் ஆண்டில் 9.69 சதவீதம் வளர்ச்சியடைந்திருக்கிறது. இது மகிழ்ச்சியும், மன நிறைவும் அளிக்கக்கூடியது தான் என்றாலும், வேளாண்துறையின் வளர்ச்சி வெறும் 0.15 சதவீதமாக குறைந்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது. அடிப்படையில் வேளாண்மையை சார்ந்த மாநிலமான தமிழகம், விவசாயிகள் முன்னேறாமல் மாநிலம் முன்னேற முடியாது என்ற உண்மையை அறிந்திருந்தும் வேளாண் வளர்ச்சிக்காக முன்னோக்கு நடவடிக்கைகளை தமிழக அரசு இதுவரை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.

2024 - 25 ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 9.69 சதவீதம் அதிகரித்திருக்கும் நிலையில், அதைவிட அதிகமாக சேவைத்துறை 12.7 சதவீதமும், உற்பத்தித்துறை 9 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால், தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக திகழக் கூடிய முதன்மைத் துறையான வேளாண்துறையோ, சேவைத்துறையின் வளர்ச்சியில் கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்கை மட்டுமே எட்டியிருக்கிறது.

தமிழகத்தில் பொருளாதார உற்பத்திக்கு, வெறும் 14 சதவீதத்தினரை மட்டுமே கொண்ட சேவைத்துறை 53 சதவீதம் பங்களித்துள்ளது. 26 சதவீதத்தினரைக் கொண்ட உற்பத்தித்துறை 37 சதவீதம் பங்களித்துள்ளது. ஆனால், 60 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக திகழும் வேளாண் துறை வெறும் 10 சதவீதம் மட்டுமே பங்களித்திருக்கிறது. இது தமிழ்நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்குமே தவிர குறைக்காது.

2024 - 25 ஆம் ஆண்டில் நிலையான விலைமதிப்பின்படி தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) ரூ.17,23,698 கோடி என்றால், அதில் வேளாண்துறையின் பங்களிப்பு ரூ.1,72,369.8 கோடி மட்டுமே. அதன்படி பார்த்தால் தமிழகத்தில் வேளாண்மையை நம்பியுள்ள நான்கரை கோடி மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.38,304 மட்டும் தான். அதே நேரத்தில் தமிழக மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.2,29,826 ஆகும். இரண்டுக்கும் இடையிலான இடைவெளி மலைக்கும், மடுவுக்குமானதாகும்.

சேவைத்துறை வளர்ச்சியையும், அதன் மூலம் கிடைக்கும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மட்டுமே கருத்தில் கொண்டு ஒரு மாநிலம் முழுமையான வளர்ச்சியை அடைந்து விட்டதாக கருத முடியாது. தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் விவசாயிகள் தான். அவர்கள் முன்னேறாமல் தமிழகம் முன்னேறிவிட்டதாக கூறுவது மாயையாகத்தான் இருக்குமே தவிர, உண்மையாக இருக்க முடியாது.

வேளாண்துறை முன்னேறவேண்டுமெனில், ஆண்டுக்கு சராரியாக 4 சதவீதம் வளர்ச்சி எட்டப்படவேண்டும். ஆண்டுக்கு 6 சதவீதம் வளர்ச்சி எட்டப்பட்டால்தான் வேளாண்மை லாபம் தரும் தொழிலாக மாறும். அதை இலக்கு வைத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

நெல்லுக்கான கொள்முதல் விதையை குண்டாலுக்கு ரூ.3,500ஆக உயர்த்த வேண்டும்; கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதில் 60 சதவீதம் அளவுக்கு மட்டும் தான் கொள்முதல் விலை வழங்கப்படுகிறது.

விவசாயிகளின் சுமையைப் போக்க ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் இடுபொருள் மானியம் வழங்கப்படவேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. அந்தக் கோரிக்கையும் இன்றுவரை ஏற்கப்படவில்லை. இந்தப் போக்கு வேளாண்துறை வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது.

வேளாண்துறை வளர்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அதற்காக அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் நியாயமான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் இடுபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக, வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்தல், குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைத்தல் போன்றவற்றுக்காக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்படவேண்டும். அதன் மூலம் வேளாண் துறை வளர்ச்சியையும், விவசாயிகளின் வருவாயையும் அரசு அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x