Published : 06 Apr 2025 06:39 AM
Last Updated : 06 Apr 2025 06:39 AM
தமிழகம் 9.69% வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் புதிய உச்சத்தை பதிவு செய்து, நாட்டிலேயே முதல் மாநிலமாக திகழ்வதாக, மத்திய அரசின் தரவுகளை சுட்டிக்காட்டி தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் பேரிலக்கை நோக்கி வலிமை, உறுதியோடு தமிழகம் விரைந்து கொண்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவில் நடப்பு 2024-25-ம் ஆண்டில் தமிழகம் 9.69% உண்மை வளர்ச்சி வீதத்துடன் (பணவீக்கத்தை கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடுவது) மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இது. அதேபோல, 2024-25-ல் தமிழகம் 14.02% பெயரளவு வளர்ச்சி வீதத்தை (பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிடுவது) பெற்று நாட்டிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது.
நிலையான விலைமதிப்பின்படி (அடிப்படை ஆண்டு: 2011-12), கடந்த 2023-24-ல் ரூ.15.71 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) கடந்த 2024-25-ல் ரூ.17.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு கடந்த 2017-18-ல் அதிகபட்சமாக வளர்ச்சி வீதம் 8.59% ஆகவும், 2020-21-ல் கரோனா பெருந்தொற்றின்போது குறைந்தபட்சமாக 0.07% ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் பல மாநிலங்கள் எதிர்மறை வளர்ச்சியை கொண்டிருந்த நிலையில், தமிழகம் குறைந்தபட்சம் நேர்மறை வளர்ச்சியை கொண்டிருந்தது.
மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சக இணையதளத்தில் குஜராத், பிஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 2024-25-ம் ஆண்டுக்கான வளர்ச்சி வீத தரவுகள் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
தமிழக அரசு கடந்த மார்ச் 2-வது வாரத்தில் முதன்முதலாக வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழக வளர்ச்சி 8%-க்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு வெளியிட்ட உண்மை வளர்ச்சி வீதம் அதனுடன் பொருந்திப்போவது குறிப்பிடத்தக்கது. தவிர, சென்னை பொருளியல் நிறுவனத்தின் மூத்த பொருளாதார வல்லுநர்களான சி.ரங்கராஜன், கே.ஆர்.சண்முகம் ஆகியோர் கடந்த 2024 ஜூலையில் வெளியிட்ட ஆய்வு கட்டுரையில், தமிழக வளர்ச்சி வீதம் 9.3% ஆக இருக்கும் என்று கணித்தனர். இந்த இரு மதிப்பீடுகளையும் தாண்டி அதிக வளர்ச்சியை தமிழகம் பெற்றுள்ளது.
சேவைகள் துறை (12.7%), 2-ம் நிலை துறை (9%) ஆகியவற்றில் அடைந்த வளர்ச்சிதான் இதற்கு முக்கிய காரணம். முதன்மை துறையின் செயல்பாடு 0.15% மட்டுமே. மாநிலத்தின் மொத்த மதிப்பு கூட்டலில் முதன்மை துறை, 2, 3-ம் நிலை துறைகளின் பங்களிப்பு முறையே 10%, 37%, 53% ஆகும்.
3-ம் நிலை துறையை பொருத்தவரை, மனை வணிகம் 13.6%, தகவல் தொடர்பு, ஒலிபரப்பு 13%, வர்த்தகம் பழுது நீக்கல், தங்கும் விடுதிகள், உணவகங்கள் 11.7% என்று பங்களித்துள்ளன. 2-ம் நிலை துறையை பொருத்தவரை உற்பத்தி, கட்டுமானம் முறையே 8%, 10.6% வளர்ச்சியை பெற்றுள்ளன.
முதன்மை துறையின் முக்கிய பிரிவுகளான பயிர் தொழில், கால்நடை வளர்ப்பு ஆகிய 2 பிரிவுகளும் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை. பயிர் தொழில் -5.93%, கால்நடை வளர்ப்பு 3.84% பதிவு செய்துள்ளன.
சென்னை பொருளியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் கே.ஆர்.சண்முகம், கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சியை தமிழகம் அடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த 9.7% என்ற வளர்ச்சி வீதத்தை தக்கவைத்தால், 2032-33-ல் தமிழகம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில், ‘தமிழகம் 9.69% வளர்ச்சியுடன் நாட்டிலேயே மிக அதிக விகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பாலின சமத்துவம், அனைத்து பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்த சாதனையை நாம் எட்டியுள்ளோம். அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றை கொண்டு நமது மாநிலம், மக்களின் எதிர்காலத்தை அரசு வடிவமைத்து வருகிறது. ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் பேரிலக்கை நோக்கி வலிமை, உறுதியோடு விரைந்து கொண்டிருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சீரிய நடவடிக்கைகளால் நாட்டிலேயே அதிகபட்சமாக 9.69% வளர்ச்சியை தமிழகம் எட்டியுள்ளது. நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு காட்டும் பாரபட்சத்துக்கு நடுவே, நம் முதல்வர் தீட்டிய திட்டங்களின் வெற்றிக்கு இந்த புள்ளிவிவரமே சாட்சி. முதல்வரின் கரங்களை மேலும் வலுப்படுத்தி, தமிழகத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட்-அப் திட்டத்தில் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில், தூத்துக்குடியில் நேற்று நடந்த ‘புத்தொழில் களம்’ நிகழ்ச்சியில் தமிழக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, நிலைத்த விகிதங்களில் தமிழகத்தின் வளர்ச்சி 9.69% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் எட்ட முடியாத வளர்ச்சி ஆகும். தமிழக முதல்வர் கடந்த 4 ஆண்டுகளில் எடுத்த பல்வேறு முயற்சிகளின் வழியாக இந்த வளர்ச்சி கிடைத்துள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment