Published : 05 Apr 2025 06:44 PM
Last Updated : 05 Apr 2025 06:44 PM
சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை பார்வதி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள 150 ஆண்டு கால பழமையான ஆலமரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மரத்தின் ஒரு பகுதி மட்டுமே வெட்டப்படும் என அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மணிகண்டன் 3-வது தெருவில் உள்ள பார்வதி அம்மன் கோயிலை இடித்து விட்டு புதிதாக கோயில் கட்ட ரூ.17.30 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ள அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக இந்தக் கோயில் வளாகத்தில் தல விருட்சமாக உள்ள 150 ஆண்டு கால பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோயில் பக்தரான ரவீந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஜெகந்நாத், “அப்பகுதி மக்கள் இந்த கோயிலில் தல விருட்சமாக 150 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள பழமையான இந்த ஆலமரத்தை புனிதமாக கருதி வழிபட்டு வருகின்றனர். கோயில் திருப்பணி என்ற பெயரில் அதை அகற்றக்கூடாது,” என வாதிட்டார்.
அறநிலையத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், “அந்த ஆலமரத்தின் வேர்கள் கோயில் மதில் சுவரில் ஊடுருவியுள்ளதால், கோயில் கட்டுமானத்துக்காக அந்த மரத்தின் சில பகுதிகள் மட்டும் அகற்றப்படவுள்ளது. கோயிலின் பசுமை சூழலைப் பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த மரம் முழுமையாக அகற்றப்படாது,” என உறுதியளித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment