Published : 05 Apr 2025 07:06 AM
Last Updated : 05 Apr 2025 07:06 AM

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர மத்திய அரசு மறுப்பு: ஏப்.9-ல் பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம் - முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தர மத்திய அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கை குறித்து ஆலோசிக்கும் வகையில் அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 9-ம் தேதி நடைபெறும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீட் விலக்கு சட்ட மசோதா விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசியதாவது: கடந்த 2006-ம் ஆண்டில், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழிற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வையும் ரத்து செய்து, பள்ளிகளில் 12 ஆண்டுகள் பயிலும் பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில், சமூகநீதியையும், அனைத்து பிரிவு மாணவர்களுக்கு சமவாய்ப்பையும் உறுதி செய்யும் முன்னோடி சேர்க்கை முறையை முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கினார். சமூகநீதியை நிலைநாட்டி, கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கும் இந்த முறையால்தான் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் பயனாக, மாநிலம் முழுவதும் சிறப்பான மருத்துவ சேவைகள் கிடைத்து வருகின்றன.

ஆனால், நீட் தேர்வு முறை அமலுக்கு வந்த பிறகு, இதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல இயலாத கிராமப்புற, ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக்கனி ஆகிவிட்டது. இதனால், கிராமங்கள், பின்தங்கிய பகுதிகளில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் எதிர்காலத்தில் பாதிக்கப்படும்.

நீட் தேர்வானது, பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. இந்த தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுவது சமூகநீதிக்கு எதிரானது என்பதில் தமிழக மக்கள், அரசியல் கட்சிகள், சமூக சிந்தனையாளர்கள் என அனைவரிடமும் கருத்து ஒற்றுமை உள்ளது. அதன் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் சரியான மாற்று முறை குறித்து பரிந்துரைக்க, முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழுவை இந்த அரசு அமைத்தது.

அந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2021 செப்டம்பர் 13-ம் தேதி ‘தமிழ்நாடு மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் - 2021’ என்ற மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நீண்ட சட்ட போராட்டத்துக்கு பிறகு, ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்காமல் மறுபரிசீலனை செய்ய திருப்பி அனுப்பினார்.

எனது தலைமையில் கடந்த 2022 பிப்ரவரி 5-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, அதில் ஒருமனதாக எடுத்த தீர்மானத்தின்படி, சட்டப்பேரவையில் இந்த மசோதா பிப்ரவரி 8-ம் தேதி மீண்டும் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய அரசின் சுகாதாரம், ஆயுஷ், உயர்கல்வி, உள்துறை என பல்வேறு அமைச்சகங்கள் கோரிய அனைத்து கேள்விகளுக்கும் தமிழக அரசு உடனுக்குடன் உரிய விளக்கம் அளித்தது. ஆனால் இதை ஏற்காத மத்திய அரசு, நமது மாணவர்களுக்கு பேரிடியாக, நமது நீட் விலக்கு சட்டத்துக்கு ஒப்புதல் தர மறுத்துள்ளது. இந்த வருந்தத்தக்க செய்தியை பேரவையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டப்பேரவையின் மாண்பை அவமதித்துள்ள மத்திய அரசின் இத்தகைய எதேச்சதிகார போக்கு, அரசமைப்பு சட்டம் தந்துள்ள கூட்டாட்சி கருத்தியல் வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயம். தமிழக மக்களின் எண்ணங்களையும், இந்த பேரவையின் தீர்மானங்களையும் மத்திய அரசு கருத்தில் கொள்ளவே இல்லை. இதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

நமது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருக்கலாம். ஆனால், நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை. இதில் அடுத்த கட்டமாக நாம் எடுக்க வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடமும் கலந்து பேசப்படும்.

இதுதொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் வரும் 9-ம் தேதி மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெறும். அதில் சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். தமிழகத்தில் மருத்துவக் கல்வி கனவோடு பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர் சார்பாக, அவர்களது கனவை நனவாக்க தமிழக அரசு உறுதியோடு சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x