Published : 05 Apr 2025 12:33 AM
Last Updated : 05 Apr 2025 12:33 AM

நீட் குறித்து அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது மக்களை ஏமாற்றும் நாடகம்: பழனிசாமி விமர்சனம்

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்த பின், செய்தியாளர்களை சந்தித்தனர்.படம்: எஸ்.சத்தியசீலன்

நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகமே அனைத்துக்கட்சி கூட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குறிப்பிட்ட ஒரு பொருள் குறித்து பேச அனுமதிக்குமாறு பேரவைத் தலைவர் மு.அப்பாவுவிடம் கோரினார். அப்போது பேசிய பேரவைத்தலைவர் அப்பாவு, "மழையில் நெல் மூட்டைகள் நனைந்தது, முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக சிறப்புத் தீர்மானங்களை கொடுத்துள்ளீர்கள். அது தொடர்பாக பேசலாம். நீங்கள் குறிப்படும் பொருள் ஏற்கெனவே மறுக்கப்பட்டது. அதுகுறித்து பேச அனுமதிக்க முடியாது" என்றார்.

இதையடுத்து அனுமதிகோரி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து கூச்சலிட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர். அவைக்கு வெளியே கோஷமிட்ட அவர்களை, அனுப்புமாறு அவை காவலர்களுக்கு பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் கும்பல் தாக்குதல் நடந்துள்ளது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல் இதுவரை தமிழகத்தில் நடந்த வரலாறு இல்லை. இவ்வாறு செய்தியாளர்கள் பாதுகாப்பு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்தோம். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட தமிழக காவல்துறை இன்றைக்கு கைகட்டி, மவுனம் சாதித்து திமுகவின் ஏவல் துறையாக செயல்படுகிறது. முதல்வர் வீட்டில் மலத்தை கொட்டினால் ஒப்புக் கொள்வாரா. இதெல்லாம் பெரிய விஷயமா என்கிறார் அவை முன்னவர்.

நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸும் திமுகவும் தான். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில், திமுகவை சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதார இணையமைச்சராக இருந்தபோது நீட் தேர்வை அறிவித்தனர். இப்போது எதிர்ப்பதாக கூறி திமுக இரட்டை வேடம் போடுகிறது. விளையாட்டுத் துறை அமைச்சரோ நீட் தேர்வு ரத்துக்கான ரகசியம் தெரியும் என்றார். அதை இப்போதாவது வெளிப்படுத்த வேண்டும். எத்தனை நாள் தான் மக்களை ஏமாற்றுவீர்கள்.

நீட் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என பேரவையிலேயே முதல்வர் தெரிவித்தார். பிறகு எதற்கு அனைத்துக் கட்சி கூட்டம். இளைஞர்களையும் மக்களையும் ஏமாற்றும் வகையில் மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். அனைத்துக் கட்சி கூட்டத்தால் ஒரு பயனும் இல்லை. நீட் தேர்வு ரத்து என்னும் திமுகவின் வாக்குறுதியை மாணவர்கள் நம்பினர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தோல்வி பயத்தால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

நீட் தேர்வு ரத்து போன்ற பொய்களை சொல்லும் திமுகவுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் மரண அடி கொடுப்பார்கள். நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களால் போட்டி போட முடியாத சூழல் இருந்த நிலையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை மருத்துவராக்கியது அதிமுகவின் சாதனை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 3 Comments )
  • P
    Prakash

    பழனிச்சாமியால் முதலாளி 'ஜீ' க்கு எதிராக கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது.... கலந்துகொள்ளவும் மாட்டார்.. அதனால் தான் இப்படி ஒரு அறிவிப்பு. இதே போன்ற அறிவிப்புகளை அந்த கூட்டணிக்கு அடிபோடும் எல்லா கட்சிகளுமே வெளியிடும்.

  • S
    S. Chandran

    ஈபிஎஸ் என்ன சொல்ல வருகிறார் .நீட் தேர்வு ரத்து பற்றி மேல் நடவடிக்கை தேவையில்லை என்று கூறுகிறாரா. இவர் ஆட்சியில் தான் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது .அப்போது ஏன் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்.இவர் ஆட்சியில் நீட் தேர்வு மசோதா திரும்ப வந்த தை நீண்ட காலமாக மறைத்து வைத்தாரே. ஏன் என்று கூறுவாரா ? பத்து நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் சந்திக்க விழுந்தடித்து ஓடினாரே .மக்கள் பிரச்சனையை அவரிடம் பேசியதாகவும் தெரிவித்தார் .நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சரிடம. கூறினாரா ? தன்னுடைய சுய நலத்தேவைகளுக்கு மத்திய அமைச்சரைச் சந்தித்தாக தெரிகிறது. மக்கள் பிரச்சனை பற்றி பேசவே இல்லை.யார் நடத்துவது நாடகம் . மக்கள் பிரச்சனையில் ஏதாவது பயன்கள் கிடைத்துள்ளதா .இல்லையே .ஊடகங்களுக்கு அறிக்கை அளிப்பதோடு சரி.மக்களுக்கு ஒரு பயனுமில்லை. மக்கள் சந்திக்கும் பல பிரச்சனைகள் இவர் ஆட்சியில் ஏற்பட்டது தானே. இந்த நிலையில் 2026 தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்போம் என்று அறிவிக்கிறார் .இவர் கனவு காண உரிமை உண்டு. தமிழக மக்கள் இவரை ஏற்றுக் கொள்ளவில்லையே. இவர் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டுக்களை மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர் .தகுந்த பாடம் புகட்ட காத்திருக்கின்றனர். அத்துடன் இவருடைய சுயநல அரசியலுக்கு அஸ்தமனம் தான் .

 
x
News Hub
Icon