Published : 05 Apr 2025 12:11 AM
Last Updated : 05 Apr 2025 12:11 AM
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டையடுத்து சென்னையில் கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படத்தின் 2-ம் பாகம் ‘எம்புரான்’ என்ற பெயரில் கடந்த 27-ம் தேதி வெளியானது. இந்த படத்தை கோகுலம் கோபாலனின் தயாரிப்பு நிறுவனமான கோகுலம் மூவிஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
இந்தப் படம், பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது 2002-ம் ஆண்டு அங்கு நடந்த கலவரத்தை குறித்து பேசுவதாக கூறி வலதுசாரிகள் எம்புரானை படத்தை கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் இந்து மதத்தினரை புண்படுத்தும் விதமாக சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அதனை நீக்க வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குறிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தமிழகத்திலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், இப்படத்தை தயாரித்த கோகுலம் குழும நிறுவனங்களில் ஒன்றான சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் சிட் அண்ட் பைனான்ஸ் கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
ஏற்கெனவே, கடந்த 2017-ல் தமிழகம், கேரளா, ஆந்திராவில் கோகுலம் நிதி நிறுவனத்தின் அலுவலகங்களில் ஒரேநேரத்தில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது. இதில் ரூ.1,000 கோடி அளவுக்கு வரிஏய்ப்பு நடந்திருப்பதாக அதுதொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறை அமலாக்கத் துறைக்கு அனுப்பி வைத்திருந்தது. அவற்றை ஆய்வு செய்த அமலாக்கத் துறை, இதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருக்க முகாந்திரம் இருப்பதாக கூறி, அதன் அடிப்படையில் தற்போது இந்த சோதனைகளை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், நீலாங்கரையில் உள்ள கோகுலம் கோபாலனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. நள்ளிரவைத் தாண்டியும் நடந்த இந்த சோதனையில் பல சொத்து ஆவணங்கள், வங்கிக் கணக்கு விவரங்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், கேரளாவில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனம் மற்றும் வீடுகளிலும் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகுதான், எத்தனை கோடி ரூபாய் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது என்ற விவரம் தெரியும் என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment