Published : 04 Apr 2025 07:37 PM
Last Updated : 04 Apr 2025 07:37 PM
சென்னை: திருவண்ணாமலை அரசுப் பள்ளியில் சிறுவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் சத்துணவுப் பணியாளர்கள் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம் செங்குணம் கொல்லைமேடு பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 42 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவனை, சத்துணவுப் பணியாளர்கள் துடைப்பத்தால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக, சமூகநலத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் நேரடி விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணை அறிக்கையை சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரனிடம், ஆணையர் லில்லி இன்று (ஏப்.4) சமர்பித்தார். அந்த அறிக்கையில், ‘சிறுவன் மீதான தாக்குதல் சம்பவம் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் மதியம் மாணவன் ஜோதீஸ்வரன், சத்துணவு சமையலர் லட்சுமி என்பவரிடம் முட்டை வழங்க கேட்டதாகவும், அதற்கு சமைத்த 43 முட்டைகளில் 3 முட்டைகள் உரிக்கும்போது சேதமடைந்து உடைந்துவிட்டதாகவும், அதற்கு பதில் நாளை முட்டை வழங்குவதாகவும் சமையலர் மற்றும் உதவியாளர் கூறியுள்ளனர்.
இதை கேட்ட மாணவன், அவர்களை திட்டி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சமையலர் மற்றும் உதவியாளர் ஆகியோர், மாணவனை துரத்தி சென்று பிடித்துள்ளனர். இதில், லட்சுமி என்ற சமையலர் மாணவனை துடைப்பத்தால் 2 முறை தாக்கி உள்ளார். இதை அருகில் இருந்து கவனித்த 4-ம் வகுப்பு படிக்கும் சக மாணவன் சரத், வகுப்பில் மேஜையின் மீது இருந்த ஆசிரியை புளோரா என்பவரின் செல்போனை எடுத்து அதை வீடியோ பதிவு செய்துள்ளார்.
அந்தப் பதிவை, பள்ளியில் மேலாண்மைக் குழுவில் உள்ள தன் பெற்றோருக்கு பகிர்ந்துள்ளார் என சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் ஆசிரியை அளித்த வாக்குமூலம் வாயிலாக தெரிய வருகிறது. தாக்குதல் நடத்திய பணியாளர்கள் தங்களின் தவறை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில், அவர்கள் இருவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய போளூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment