Published : 14 Jul 2018 09:05 AM
Last Updated : 14 Jul 2018 09:05 AM
கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் முகத்துவாரங்களில் அகற்றப்படாத மணல் மேடுகளால் சென்னையில் கடல் அரிப்பு மற்றும் கொசுத் தொல்லையால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தென்னிந்திய மீனவர் நலச்சங்கத் தலைவர் கு.பாரதி கூறியதாவது:
வழக்கமாக ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும். முன்பெல்லாம் அடையாறு, கூவம் ஆகிய ஆறுகளின் முகத்துவாரங்கள் வழியாக கடல் அலை உள்ளே செல்லும். இதனால் அலைகளின் வேகம் குறையும். கடல் அரிப்பும் ஏற்படாது. தற்போது முகத்துவாரங்களில் மணல் மேடுகள் இருப்பதால், அலைகள் ஆறுகளுக்குள் செல்லாமல், குடியிருப்புகளை நோக்கி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். இப்பகுதி மக்களும் இதே கருத்தை தெரிவிக்கின்றனர்.
கடல் அரிப்பு தொடர்பாக சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் கூறியதாவது:
கடல் அரிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. ஓரிடத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டால், அங்கு கற்களைக் கொட்டி பாதுகாக்கும்போது, வேறு இடத்தில் கடல் அரிப்பு ஏற்படும். மேலும் கடல் அரிப்புக்கு காற்று வீசும் திசையும் ஒரு காரணம். இயற்கையாக கடல் அலைகளை உள்வாங்கிக் கொண்டு அலைகளின் வேகத்தை குறைப்பதில் ஆற்று முகத்துவாரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆற்று முகத்துவாரப் பகுதிகளில் ஏற்படும் மணல் மேடுகளால், கடல் அலைகள் ஆறுகளுக்குள் செல்லாதபோது, அதன் அருகில் கட்டாயம் கடல் அரிப்பு ஏற்படும். அதை தவிர்க்க கூவம், அடையாறு ஆகிய ஆறுகளின் முகத்துவாரங்களில் மணல் மேடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொசுக்கள் உற்பத்தியாவது தொடர்பாக புதுச்சேரியில் உள்ள, மத்திய அரசின் நோய் கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறியதாவது:
கடல் அலையின் சீற்றம் அதிகரிக்கும்போது, கடல் நீர் ஆற்று முகத்துவாரங்கள் வழியாக சில கி.மீ. தூரத்துக்கு சென்று மீண்டும் கடலுக்குள் வந்துவிடும். இந்த நிகழ்வின்போது நீர் ஓடிக்கொண்டே இருப்பதால் அதில் கொசுக்கள் முட்டையிடாது. கழிவுநீரில் உப்புநீர் கலப்பதால் அதில் கொசுப் புழுக்களும் வளராது. அதன் காரணமாக கொசுத்தொல்லை குறையும். அதற்காக ஆற்றின் முகத்துவாரங்களில் மணல் மேடுகளை அகற்றும் நடைமுறை பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஆற்றின் முகத்துவாரங்களில் எத்தனை முறை மணல் எடுத்தாலும், மீண்டும் குவிந்துவிடுகிறது. இதற்கு, தேசிய கடல்சார் தொழில்நுட்ப மையத்திடம் உதவி கேட்டிருக்கிறோம். அவர்களும் கூவம் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் வழங்கும் ஆலோசனைப்படி, மணல் மேடுகள் அகற்றப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT