Published : 03 Apr 2025 11:57 AM
Last Updated : 03 Apr 2025 11:57 AM
சென்னை: இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குவதாக தமிழக பாஜக சட்டபேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்த வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு சென்ற பிறகு, அதில் 14 கோரிக்கைகளை புதிதாக ஏற்கப்பட்டு பின்னர் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து கோஷம் போட்டுள்ளனர். பொதுவாக சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வருவது, போராட்டம் நடத்துவது போன்றவற்றை எதிர்கட்சியினர் தான் செய்வார்கள். ஆனால் இன்றைக்கு சட்டப்பேரவையையே போராட்ட களமாக முதல்வர் மாற்றியிருக்கிறார். மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்த்து தீர்மானம் கொண்டு வருவது என்பது வருத்தத்திற்குரியது.
இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர். தேர்தலுக்காக வாக்கு வங்கி அரசியலை திமுக தேடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆளுங்கட்சியே சட்டப்பேரவையில் கோஷம் போடுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். இதையெல்லாம் எங்கே போய் சொல்வது? முதல்வர் தான் நீதி வழங்க வேண்டும். முதல்வரே நீதிமன்றம் செல்கிறார் என்றால் அதற்கு நாம் என்ன பண்ண முடியும்? இது தேவையில்லாத ஒன்று. அதையொட்டியே பாஜக இன்று வெளிநடப்பு செய்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுக எம்எல்ஏக்கள்: முன்னதாக மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழக சட்டப்பேரவைக்கு திமுக எம்எல்ஏக்கள் வருகை தந்தனர்.
இவர்களுடன் முதல்வர் ஸ்டாலினும் தனது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தது சட்டப்பேரவையில் பெரும் கவனம் ஈர்த்தது. இதனை சுட்டிக்காட்டியும் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...