Published : 03 Apr 2025 05:23 AM
Last Updated : 03 Apr 2025 05:23 AM

சிறுபான்மை முஸ்லிம் மக்களின் நலனில் கவனம் செலுத்துங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: சிறுபான்மை முஸ்லிம் மக்களின் நலன்கள், வக்பு அமைப்புகளைப் பாதுகாப்பதில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையை வழங்குகிறது. அந்த உரிமையை நிலைநாட்டுவதும் பாதுகாப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் கடமையாகும். இருப்பினும் வக்பு சட்டம், 1995-ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாததுடன் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்கு கடுமையான பாதிப்புகளை விளைவிப்பதாக இருக்கிறது.

தற்போதுள்ள வக்பு சட்டத்தில் உள்ள அம்சங்கள் நீண்டகாலமாகச் சிறந்த பயன்பாட்டில் உள்ளன. வக்பு சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் உள்ளன. வக்பு சட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதிலும், பாதுகாப்பதிலும் வக்பு வாரியங்களின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் பலவீனப்படுத்தும் வகையிலும் உள்ளது. மேலும் தற்போதுள்ள சட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் முன்மொழியப்பட்டுள்ள பெரிய அளவிலான திருத்தங்கள், அச்சட்டத்தின் நோக்கத்தையே நீர்த்துப்போகச் செய்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உதாரணமாக, மாநில வக்பு வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை கட்டாயமாக சேர்ப்பது என்பது முஸ்லிம் சமூகத்தின் மத மற்றும் தொண்டு அறக்கட்டளைகளை சுயாதீனமாக நிர்வகிக்கும் திறனை மற்றும் மத சுயாட்சியை குறைத்து மதிப்பிடுவதாக அமைகிறது. அத்துடன், 'வக்பு பயனர்' விதியை நீக்குவது பல வரலாற்று அடிப்படையிலான வக்பு சொத்துக்களின் உரிமைக்கு அச்சுறுத்தலாக அமையும். மேலும், குறைந்தது ஐந்து ஆண்டுகள் இஸ்லாத்தை கடைப்பிடித்தவர்கள் மட்டுமே வக்புக்கு சொத்துக்களை நன்கொடையாக வழங்க முடியும் என்ற நிபந்தனை முஸ்லிம் அல்லாதவர்கள் வக்புக்கு சொத்துக்களை நன்கொடையாக வழங்குவதைத் தடுத்துவிடும். இது நாட்டின் மதநல்லிணக்க கலாச்சாரத்துக்கு இடையூறாக இருக்கும்.

தற்போதுள்ள ‘வக்பு சட்டம் – 1995’ போதுமானதாகவும், வக்புக்களின் நலன்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க தெளிவான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாலும், வக்பு சட்டம், 1995-ல் இதுபோன்ற திருத்தங்கள் இப்போது தேவையில்லை என்பதே எங்கள் கருத்தாகும்.

மேற்கூறிய அனைத்தையும் கருத்தில்கொண்டு, வக்பு (திருத்த) சட்டம், 2024-ஐ முழுமையாக திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்த தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 27ம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் நகலை இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். சிறுபான்மை முஸ்லிம் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், வக்பு அமைப்புகளைப் பாதுகாப்பதிலும் தாங்கள் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x